

வால்நட் இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு, எடை மேலாண்மை போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனவே இதை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வால்நட்ஸை சாலடுகள், சூப்களில் சேர்த்து ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம். இதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது அதன் வெப்பத் தன்மையைக் குறைத்து செரிமானத்திற்கு உதவும்.
வால்நட் கொண்டு சட்னி செய்வது மிகவும் எளிது; அத்துடன் சுவையும் அதிகம். ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்த வால்நட் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் இது குடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
வால்நட் சட்னி:
வால்நட் (அக்ரூட்) பருப்புகள் 1/2 கப் வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
தயிர் 1 கரண்டி
உப்பு தேவையானது
சீரகம் 1/2 ஸ்பூன்
பூண்டு 2 பற்கள் (விருப்பப்பட்டால்)
வால்நட் பருப்புகளை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து தோலை நீக்கிவிடவும். இது அதனை மென்மையாக்க உதவும். ஊறவைத்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஊற வைத்த வால்நட்டை, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக இல்லாமல் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையுடன் தயிர் சேர்த்து கலக்கவும். இந்த க்ரீமி வால்நட் சட்னியை பிரியாணி, புலாவ், சூடான சாதத்துடனும், ரொட்டி, தோசை போன்றவற்றிற்கும் தொட்டுக்கொள்ளலாம்.
முள்ளங்கி வால்நட் சட்னி:
வெள்ளை முள்ளங்கி 2 மீடியம் சைஸ் தயிர் 1 கப்
வால்நட் பருப்புகள் 1/4 கப்
உப்பு தேவையானது
சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
முள்ளங்கியை தோல் சீவி துருவிக்கொள்ளவும். அத்துடன் சிறிது உப்பு கலந்து தனியாக 15 நிமிடங்கள் வைக்கவும். தயிரை நன்கு கடைந்து கொள்ளவும். வால்நட் பருப்புகளை மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். தயிரில் பொடித்த வால்நட் பருப்புகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வறுத்துப் பொடித்த சீரகத்தூள், தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
உப்பு போட்டு வைத்த முள்ளங்கித் துருவலை கையால் நன்கு கசக்கி தண்ணீரைப் பிழிந்து எடுத்து விட்டு தயிரில் போட்டு கலக்கவும். பத்து நிமிடங்கள் கழித்து பரிமாற தயிரில் அதன் சுவை அத்தனையும் இறங்கி மிகவும் ருசியாக இருக்கும். இதனை பிரியாணி, புலாவ் மற்றும் சாதத்துடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: முள்ளங்கியிலிருந்து பிழிந்தெடுத்த நீரை வீணாக்காமல் பராத்தா, சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சேர்த்துக்கொள்ளலாம்.