
தோசை, தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். கரகரப்பான மொறுமொறுப்புடன், எண்ணற்ற சைடிஷ்களுடன் பரிமாறப்படும் தோசை, உணவென்பதைத்தாண்டி, பலரின் வாழ்வில் ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டது. அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊறவைத்து, அரைத்து, புளிக்கவைத்துத் தயாரிக்கப்படும் இதன் நொதித்தல் செயல்முறை, குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், இதில் ஒரு சிறிய குறைபாடு உண்டு.அதுதான் புரதச் சத்து குறைவாக இருப்பது.
புரதச் சத்து என்பது உடல் வளர்ச்சிக்கும், தசைகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அத்தியாவசியமானது. இந்த எளிமையான தோசை மாவை இன்னும் ஆரோக்கியமானதாகவும், புரதச் சத்து நிறைந்ததாகவும் மாற்ற சில எளிய வழிகள் உள்ளன. உங்கள் தோசை மாவில் சேர்க்கக்கூடிய சில அற்புதமான பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
புரதச் சத்து நிறைந்த தோசை மாவுக்கான 5 வழிகள்:
1. வழக்கமாக அரிசிக்குப் பதிலாக, உளுந்துடன் பாசிப்பயறைச் சேர்த்து ஊறவைத்து மாவு அரைக்கலாம். பாசிப்பயறில் அதிக அளவில் தாவர அடிப்படையிலான புரதம் (சுமார் 24 கிராம்/100 கிராம்), நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இது தோசையை எளிதில் செரிமானமடையச் செய்வதுடன், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதனால், தோசை மென்மையாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் மாறும்.
2. குயினோவா (Quinoa), ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன் கூடிய ஒரு முழுமையான புரத மூலமாகும். தோசை மாவுக்காக அரிசி மற்றும் உளுந்தை ஊறவைக்கும்போது, அதனுடன் ½ கப் குயினோவாவையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கலாம். சுமார் 4 கிராம் புரதம்/100 கிராம் குயினோவாவில் உள்ளது. இது தோசையை மேலும் மென்மையாக்கி, புரதச்சத்தை கணிசமாக அதிகரிக்கும்.
3. சோயாபீன்ஸ், புரதச்சத்தின் மிகச் சிறந்த மூலங்களில் ஒன்றாகும். உங்கள் தோசை மாவின் அளவிற்கு ஏற்ப சோயாபீன்ஸை ஊறவைத்து, பின்னர் வேகவைத்து, அதை ஒரு மிருதுவான பேஸ்ட்டாக அரைத்து, வழக்கமான தோசை மாவுடன் சேர்க்கலாம். புரதத்துடன், சோயாபீன்களில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், தோசையின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து மதிப்பை இது உயர்த்தும்.
4. தோசை ஊற்றுவதற்கு முன், புளித்த தோசை மாவில் 2-4 தேக்கரண்டி கடலை மாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கலாம். 100 கிராம் கடலை மாவில் சுமார் 20-22 கிராம் புரதம் உள்ளது. கடலை மாவு மாவுடன் நன்றாகக் கலந்து, உங்கள் தோசைக்கு ஒரு கவர்ச்சியான பொன் நிறத்தையும், மேம்பட்ட சுவையையும், மென்மையான அமைப்பையும் வழங்கும்.
5. அமராந்த், சுமார் 13 கிராம் புரதம்/100 கிராம் கொண்ட ஒரு சத்தான தானியம். இதை மாவில் பயன்படுத்துவதற்கு, இரவு முழுவதும் ஊறவைத்து, பின்னர் அரிசி மற்றும் உளுந்துடன் சேர்த்து அரைக்கலாம். அல்லது தனியாக அரைத்து, புளிக்கவைக்கும் முன் மாவில் சேர்க்கலாம். இதில் புரதம் மட்டுமல்லாமல், கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் நிறைந்துள்ளன, இது தோசையை மேலும் ஆரோக்கியமானதாக்கும்.
இந்த ஐந்து புரதச் சத்து நிறைந்த பொருட்களை உங்கள் தோசை மாவுடன் சேர்ப்பதன் மூலம், நீங்கள் தினசரி புரதத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இது உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.