
இட்லி ஃப்ரை
தேவை:
இட்லிகள் - 8
தக்காளி - 1
வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்
நெய் - ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இட்லி துண்டுகளை நான்கு ஐந்தாக போட்டு, பொரித்து எடுக்கவும். மீதியுள்ள எண்ணெயில் வெங்காயம், தக்காளியை வதக்கி, உப்பு, மிளகாய் தூள் கலந்து இறக்கி வைக்கவும். அதில் பொரித்த இட்லி துண்டுகளைப் போட்டு, தக்காளி சாஸ், நெய் சேர்த்து பிசிறி எடுத்து வைக்கவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இட்லி ஃபிரை ரெடி.
இட்லி போண்டா
தேவை:
இட்லிகள் - 1
கடலை மாவு - அரை கப்
மல்லித்தழை - சிறிது
பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
இட்லிகளை உதிர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை கலந்து, கடலை மாவு சேர்த்து நீர் தெளித்து கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த இட்லிகளை போண்டாக்களாக உருட்டி போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். மொறு மொறு இட்லி போண்டா தயார்.
தாளிப்பு இட்லி
தேவை:
இட்லிகள் - 8,
வர மிளகாய் - 1
நல்லெண்ணெய் - அரை கப்,
கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1ஸ்பூன் ,
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
சிறுவாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, உப்பு சேர்க்கவும். ஒவ்வொரு இட்லியின் இருபுறமும் தாளிப்பை பரப்பவும். சூடான, சுவையான, மணமான, மென்மையான தாளிப்பு இட்லி தயார். பயணங்களின் போது எடுத்துச்செல்ல ஏற்ற சிற்றுண்டி இது.
இட்லி கட்லெட்
தேவை:
இட்லிகள் - 6
இட்லி மிளகாய் தூள் அல்லது மிளகு சீரகத்தூள் - 6 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
இட்லிகளை சதுர துண்டுகள் ஆக்கவும். இட்லி மிளகாய் தூளை சிறிது எண்ணெயில் குழைத்து, அதில் இட்லி துண்டுகளைப் புரட்டி எடுக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, இட்லி துண்டுகளை இரண்டு மூன்றாக போட்டு, சூடானதும் எடுக்கவும். சூடான, சுவையான இட்லி கட்லெட் தயார்.