
மிக்ஸியில் மாவு அரைக்கும்போது அது சூடாகிவிடாமல் இருப்பதைத் தவிர்க்க சிறிது ஐஸ் வாட்டர் கலந்து அரைத்தால் போதும்.
சிறிதளவு எள், ஜீரகம், பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை சேர்த்து ஜவ்வரிசி வடாம் போடும்போது சேர்த்துக்கொண்டால், பொரித்து சாப்பிடும்போது தட்டைபோல சுவையாக இருக்கும்.
ஃ பரிட்ஜில் வைக்கும் சப்பாத்தி மாவு கறுத்துப் போகாமல் இருக்க மாவை பிசைந்து பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கவேண்டும்.
அடை மீந்துவிட்டால் கொஞ்சம் கெட்டியாகிவிடும். அதைத் தூர எறியாமல், விருப்பமான வடிவில் வெட்டி எண்ணையில் பொரித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.
மைதா மாவுடன் ரவை கலந்து தோசை வார்க்கும்போது உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரிக்காய் இவற்றைத் துருவிப்போட்டு தோசை வார்த்தால் செம டேஸ்ட்டாக இருக்கும்.
கேசரி, அல்வா, ஜிலேபி போன்றவற்றில் கேரட் சாறு சேர்த்தால் சுவை கூடும், நிறமும் அழகாக இருக்கும்.
ஊறுகாய்க்கு தாளிக்கும்போது, சிறிது எள்ளை வறுத்துப் பொடித்துச்சேர்த்தால் மணம் கூடுமென்று மட்டுமல்லாமல் ஊறுகாய் சீக்கிரம் கெட்டும் போகாது.
முட்டைக்கோஸின் கனமான தோலைத் தூக்கிப் போட்டுவிடாமல் பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் சூப்பர் சுவையில் பஜ்ஜி தயார்.
அடைக்கு அரைக்கும்போது மிளகாய் வத்தல் போட்டு அரைத்து, பின் ஒரு பச்சை மிளகாய் நறுக்கிப்போட்டால் நல்ல வாசனையாக இருக்கும்.
ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் அதை தோல் சீவி நறுக்கி, உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் கலந்து தாளித்துக்கொட்டிவிட்டால் வித்தியாசமான சுவையில் ஆப்பிள் ஊறுகாய் தயார்.
நறுக்கிய வெங்காயத் துண்டுகளை வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வதக்கி, பிறகு மாவில் தோய்த்தெடுத்தால் வெங்காய பஜ்ஜி கூடுதல் சுவையுடன் இருக்கும்.
கோதுமை மாவை வெறும் வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்து ஆறியதும், உப்பு போட்டு பிசைந்து, முறுக்கு பிழியும் அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து ஆவியில் வேகவைத்தால் சுவையான கோதுமை சேவை தயார்!