
பெங்காலி வீடுகளின் சமையலறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டிகளில் எப்போதுமே நிறைந்திருக்கும் இந்த பஞ்ச் போரனை பற்றித் தெரிஞ்சுக்குங்க…
மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் அனைத்து கிழக்கிந்திய மாநிலங்களில் வாழும் மக்களின் வீடுகளில் சமையலுக்கு உபயோகிக்கபடும் மசாலாக்களில் மிகவும் இன்றியமையாதது இந்த பஞ்ச் போரன். பெங்காலியில் பஞ்ச் போரன் என்றால் ஐந்துவித மசாலா பொருட்கள் என்று அர்த்தம்.
பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் இது இல்லாமல் சமைக்கவே மாட்டார்கள். எதை செய்தாலும் தாளிப்பதற்கு இந்த பஞ்ச் போரன் மிக மிக அவசியம். கடைகளில் எப்படி கடுகு சீரகம் எல்லாம் பாக்கெட்டில் கிடைக்குமோ அதைப்போல இந்த மாநிலங்களில் பஞ்ச் போரனும் ரெடிமேடாக பாக்கெட்டில் கிடைக்கும்.
இதை இவர்கள் சப்ஜி, கீச்சடி, டால், ஸ்வீட் சடனி, கார சட்னி என எதை செய்தாலும் இந்த கலவை மசாலாவை போட்டுதான் தாளிப்பார்கள். இந்த கலவை மசாலா எண்ணெயில் பொரியும் போது ஏற்படும் வாசனையே அலாதிதான்.
அப்படி இதில் என்னென்ன இருக்கு என்று பார்க்கலாமா..?
பஞ்ச் போரன் மசாலா என்றால், கடுகு, சீரகம், கருஞ்சீரகம், சோம்பு மற்றும் வெந்தயம் இவை ஐந்தும் கலந்த கலவை மசாலா ஆகும்.
நீங்களும் வீட்டிலேயே இதை தயாரித்து வைத்து கொள்ளலாம். மிகவும் எளிது. மாத சாமான் வாங்கிய உடனேயே சிறிதளவு சமமாக இந்த ஐந்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு அதை வாணலியில் எண்ணெயில்லாமல் பச்சை வாசனை போகும் அளவிற்கு லேசாக வறுக்க வேண்டும். ஆறிய பிறகு ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள். சப்ஜி, சட்னி, கீச்சடி என எல்லாவற்றிற்கும் இதை தாளித்து கொட்டலாம். பெங்காலி இனத்தவர் இந்த மசாலாவை ஊறுகாயிலும் சேர்ப்பார்கள். அவர்களுடைய ஊறுகாயின் மணம் இது இல்லாமல் நிறைவு பெறாது. இன்னும் சொல்லப்போனால் snacks செய்யும் போதும் மாவில் இதை சிறிதளவு கலந்துதான் செய்வார்கள்.
இந்த பஞ்ச் போரனை வெறும் டேஸ்டிற்காக இல்லைங்க.. ஆரோக்கியத்திற்காகவும் சேர்க்கிறார்கள். ஐந்து மசாலாவுமே மருத்துவ தன்மை வாய்ந்தது. வாயு தொல்லை, அஜுரணம், சர்க்கரை வியாதி, என எல்லா வியாதிக்குமே இந்த ஐந்து மசாலாக்களுமே மருந்தாகும்.
அது மட்டுமில்லாமல் சாப்பிட்டில் நாம் சேர்க்கிற எண்ணெய், காரம், வித விதமான மசாலாத் தூள் என எல்லாவற்றின் side effectஐயும் இந்த ஐந்து பொருட்கள் balance பண்ணும். நீங்களும் இந்த மசாலாவை தயாரித்து வைத்துகொள்ளுங்கள். சமையலில் சேர்த்து பயனடையவும்.