
ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கப்படும் ஊறுகாய்கள் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் ஊறுகாய்களைவிட விரைவாக செய்யப்படுகிறது. குறைந்த நேரத்தில் தயாரிக்கப்பட்டாலும் இவை சுவை மிகுந்ததாக இருக்கும். இந்த உடனடி ஊறுகாய்களில் எண்ணெயின் அளவும் குறைவாக இருக்கும். வீட்டிலேயே செய்யப்படுவதால் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது கை கொடுக்கும்.
மாங்காய் பிசிறல்:
கிளி மூக்கு மாங்காய் 1
உப்பு தேவையானது
காரப்பொடி 1ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய்
அதிகம் புளிப்பில்லாத மாங்காய் ஒன்றை எடுத்துக்கழுவி ஈரம் போகத் துடைத்து பொடியாக நறுக்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு, காரப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு குலுக்கு குலுக்கி விடவும். இதில் நல்லெண்ணையில் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துக்கொட்ட சுண்டி இழுக்கும் சுவையில் உடனடி ஊறுகாய் தயார். இதனை தயிர் சாதம், சாம்பார் சாதம் என தொட்டுக் கொள்ளலாம்.
இரண்டு மூன்று நாட்கள் வெளியில் வைத்து சாப்பிடலாம். பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம்வரை தாங்கும்.
பெரிய நெல்லிக்காய் (ஆம்லா) ஊறுகாய்:
பெரிய நெல்லிக்காய் 1/2 கிலோ
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
காரப்பொடி 1 ஸ்பூன்
புளி சின்ன நெல்லிக்காயளவு
பெருங்காயத்தூள்
வெல்லம் சிறு துண்டு
தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய்
பெரிய நெல்லிக்காயை நன்கு அலம்பி இட்லி தட்டில் வைத்து ஆவியில் 4 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு கையால் நசுக்கி உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்துவிடவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு போட்டு, கடுகு பொரிந்ததும் நசுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து அரை கப் கரைத்த புளித் தண்ணீரை விட்டு, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ரெண்டு கொதிவிடவும். காரப்பொடி, பெருங்காயத்தூள், சின்ன வெல்லத்துண்டு ஒன்றையும் சேர்த்து கிளறி இறக்கவும். மிகவும் ருசியான உடனடி ஊறுகாய் தயார்.
மாங்காய் இஞ்சி பிசறல்:
இது மாங்காயின் சுவையும், இஞ்சியின் மணமும் கலந்தது இருக்கும். பார்க்க இஞ்சியைப் போலவே இருக்கும் இதில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு.
இஞ்சி மாங்காய் 1/4 கிலோ
உப்பு தேவையானது
பச்சை மிளகாய் 4
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் 2
தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய்
மாங்காய் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். அதில் உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், எலுமிச்சம் பழச்சாறு கலந்துவிடவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு கடுகு சேர்த்து, கடுகு பொரிந்ததும் ஊறுகாயில் போட்டுக் கிளறிவிட மிகவும் ருசியான ஊறுகாய் தயார். ஐந்தே நிமிடத்தில் இஞ்சி மாங்காயில் எலுமிச்சையின் புளிப்பு, பச்சை மிளகாயின் காரம் ஏறி மிகவும் ருசியாக இருக்கும். பச்சை மிளகாய்க்கு பதில் காரப்பொடியையும் சேர்க்கலாம்.
வயதானவர்கள் அல்லது பல் இல்லாமல் கடிக்க கஷ்டப்படுபவர்கள் மாங்காய் இஞ்சியை உப்பு, புளி, காரப்பொடி சேர்த்து விழுதாக அரைத்துக்கொண்டு வாணலியில் கடுகு, நல்லெண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும், அரைத்த விழுதை சேர்த்து சுருளக் கிளறி இறக்குவதற்கு முன்பு பெருங்காயத்தையும் சேர்த்துவிட மணக்கும் ஊறுகாய் தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பொங்கல், இட்லி, தோசை, தயிர் சாதம் என எதற்கும் தொட்டுக் கொள்ளலாம்.