உலகிலேயே மிக விலையுயர்ந்த சீஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? இதன் சுவை எப்படி இருக்கும்? ஏன் இவ்வளவு விலை? போன்ற பல சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
வழக்கத்திற்கு மாறாக, கழுதைப் பாலில் இருந்தும் ஒரு சிறப்பு வகை சீஸ் தயாரிக்கப்படுகிறது. அதன் பெயர் புலே சீஸ் (Pule Cheese).
செர்பியாவில், பல்கன் கழுதைகளின் பாலில் இருந்து புலே சீஸ் தயாரிக்கப்படுகிறது. அதன் மிருதுவான, உதிரியான அமைப்பு மற்றும் சுவைக்காக சீஸ் பிரியர்கள் பெரிய தொகையை செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். புலே சீஸ் உலகின் மிக அரிதான சீஸ் வகையாகும். இந்தச் சீஸ், 60% கழுதைப் பால் மற்றும் 40% ஆட்டுப் பாலைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதுவே, கழுதைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உலகின் முதல் சீஸ் ஆகும்.
பெல்கிரேடில் உள்ள சசாவிக்கா கழுதைப் பண்ணையில் (Zasavica donkey reserve) அழிந்து வரும் நிலையில் சுமார் 100 பல்கன் கழுதைகள் உள்ளன. இந்தக் கழுதையில் பால் கையால் கறக்கப்பட்டு, புலே சீஸ் தயாரிக்கப்படுகிறது. அதோடு, இந்த வகை சீஸை தயாரிக்கும் உலகின் ஒரே நபர் இந்தக் கழுதைப் பண்ணையின் உரிமையாளர் ஸ்லோபோடன் சிமிக் (Slobodan Simic) ஆவார். இவர் ஒரு கிலோ கழுதை சீஸை தோராயமாக 1,49,000 இந்திய ரூபாய்க்கு ($1700) விற்பனை செய்கிறார். அரிய வகை பால்கன் கழுதைகளைப் பாதுகாப்பதற்கான நிதியை இதன் மூலம் சசாவிக்கா பண்ணை திரட்டி வருகிறது.
புலே சீஸ் ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது?
ஒரு கிலோ புலே சீஸ் தயாரிக்க சுமார் 25 லிட்டர் கழுதைப் பால் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு பெண் கழுதையால் ஒரு நாளைக்கு வெறும் 0.2 லிட்டர் பால் மட்டுமே கொடுக்க முடியும். ஒரு ஆண்டில் சுமாராக 6 முதல் 15 கிலோ புலே சீஸ் மட்டுமே விற்கப்படுகிறது.
கழுதைகளுக்கு ஏற்ற பால் கறக்கும் கருவிகள் இல்லாததால், ஒரு நாளைக்கு மூன்று முறை பால் கையால் கறக்கப்பட வேண்டும். இது ஒரு கடினமான மற்றும் நேரமெடுக்கும் செயல்.
அதிக ஊட்டச்சத்து: மாட்டுப் பால் அல்லது ஆட்டுப் பாலை விட சுமார் 60% அதிக ஊட்டச்சத்துக்களைக் கழுதைப் பால் கொண்டுள்ளது. மேலும் இது பல்வேறு வைட்டமின்களையும் உள்ளடக்கியது. புலே சீஸ் வெறும் 1% பால் கொழுப்பை கொண்டுள்ளது.
ஆரோக்கிய நன்மைகள்: கழுதைப் பாலில் உள்ள அலர்ஜி எதிர்ப்புப் பொருட்கள், ஆஸ்துமா, டெர்மடிடிஸ் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற ஒவ்வாமை கோளாறுகள் வரமால் தடுக்கிறது. கழுதைப் பாலில் உள்ள அதிக வைட்டமின் C ஒரு ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்பட்டு மனித உறுப்புகள் மற்றும் திசுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்கலாம். கழுதைப் பாலில் குறைந்த கொழுப்புச் சத்து இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் சிறந்தது.