சமையலில் அசத்தலாம் வாங்க: விதவிதமான உருளைக்கிழங்கு ரெசிபிகள்!

potato-recipes
potato-recipes
Published on

ருளைக்கிழங்கு அல்லது ‘ஆலு’ எனப்படும் இந்தக் கிழங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் சமையலில் அவர்களின் உணவில் தவறாமல் முக்கிய இடம் வகிக்கிறது. உருளைக்கிழங்கு எனப்படும் ஆலு, உணவுக்கு சுவை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த உருளைக்கிழங்கை பயன்படுத்தி வித்யாசமான மிகவும் ருசிகரமான சமையல்களை செய்து அசத்துகிறார்கள் இன்றைய சமையல் வல்லுநர்கள்.

இந்தியா முழுவதும் பயணம் செய்தால், உருளைக்கிழங்கு இல்லாத உணவு முழுமையடையாது என்றே சொல்லலாம். ஆனால் அந்தந்த மாநிலத்தை பொறுத்து உருளைக்கிழங்கு சுவை முற்றிலும் மாறுபடும்.

உருளைக்கிழங்கை கொண்டு சமைக்கப்பட்ட வித்தியாசமான சில ரெசிபிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

உள்ளிக்கிழங்கு ரோஸ்ட், தமிழ்நாடு

உள்ளிக்கிழங்கு ரோஸ்ட் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் என்பது தமிழ்நாட்டின் பிரபலமான சைடு டிஷ் ஆகும். இது பொதுவாக சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதத்துடன் பரிமாறப்படுகிறது. பாதி அளவு வேகவைத்த உருளைக்கிழங்குகளை கடுகு, கருவேப்பிலை, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்குகின்றனர். வெளியே முறுவலாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும். இந்த தென்னிந்திய சுவை இதை மிகவும் சுவையானதாக மாற்றுகிறது.

டம் ஆலு, காஷ்மீர்

காஷ்மீரி டம் ஆலு மிகவும் பிரபலமான உருளைக்கிழங்கு உணவுகளில் ஒன்றாகும். இந்த பாரம்பரிய ரெசிபியில் சிறிய உருளைக்கிழங்குகளை எண்ணெயில் வறுத்து, தயிர், சோம்பு பொடி, இஞ்சி மற்றும் காஷ்மீரி மிளகாய் கொண்டு கெட்டியான குழம்பில் “டம்” முறையில் சமைக்கப்படுகிறது. இந்த உணவு மணம் மிகுந்ததாகவும் குறைந்த காரம் கொண்டதாகவும் இருக்கும். “டம்” முறையில் மிதமான தீயில் மெதுவாக சமைப்பதால் உருளைக்கிழங்கு அனைத்து சுவைகளையும் நன்கு உறிஞ்சிக் கொள்கிறது. இது பொதுவாக சாதம் அல்லது லவாசா போன்ற ரொட்டிகளுடன் பரிமாறப்படுகிறது. உணவகங்களில் கிரீம் சேர்த்து தயாரித்து வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பஞ்சாக உருகும் பாலக்காடு ராமசேரி இட்லி - ஆவியில் வேகும் பாரம்பரிய ருசி!
potato-recipes

ஆலு போஸ்டோ, மேற்கு வங்காளம்

ஆலு போஸ்டோ என்பது பெங்காலி மக்களின் மனநிறைவு உணவாகும். இதில் முக்கியமானது கசகசா விதைகளின் தனித்துவமான சுவை. உருளைக்கிழங்குகள் துண்டுகளாக நறுக்கப்பட்டு, ஊறவைத்த கசகசா, பச்சை மிளகாய் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து தயாரிக்கும் பேஸ்டில் சமைக்கப்படுகின்றன. இதன் விளைவாக மென்மையான, க்ரீமியான மற்றும் நறுமணமிக்க உணவு கிடைக்கும். கடுகு எண்ணெய் இதற்கு தனித்துவமான சற்றுக் கசப்பான சுவையை அளிக்கிறது.

படாடா பாஜி, மகாராஷ்டிரா

வடா பாவ் உள்ளே இருக்கும் உருளைக்கிழங்கு பூரணமே படாடா பாஜி ஆகும். இது வேகவைத்த உருளைக் கிழங்கை கடுகு, மஞ்சள், கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தயாரிக்கப்படுகிறது. இதன் மஞ்சள் நிறமும் மென்மையான சுவையும் இதை தனித்துவமாக்குகின்றன. சில சமயங்களில் வெங்காயம், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது. இது பூரி, சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிடப்படுகிறது.

ஆலு பிடிகா, அசாம்

ஆலு பிடிகா என்பது எளிமையையும் இயற்கை சுவையையும் காட்டும் அசாமிய உணவு. ‘பிடிகா’ என்பது மசித்தது என்பதைக் குறிக்கும். வேகவைத்த உருளைக்கிழங்கை கடுகு எண்ணெய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சில நேரங்களில் வறுத்த பூண்டு சேர்த்து மசிக்கப்படுகிறது. மிகக்குறைந்த மசாலா பயன்படுத்தப்படுவதால் உருளைக்கிழங்கின் இயல்பான சுவை வெளிப்படுகிறது.

ஜீரா ஆலு, வட இந்தியா

ஜீரா ஆலு என்பது சீரகத்தின் மணம் நிறைந்த பிரபலமான வடஇந்திய உணவு. வேகவைத்த உருளைக்கிழங்குகளை எண்ணெயில் சீரகம், மஞ்சள், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து வறுக்கின்றனர். வெளியே லேசாக முறுவலாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும். எலுமிச்சை சாறு அல்லது கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறுவர்.

இதையும் படியுங்கள்:
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பால் ஐஸ்... ஈஸியாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்!
potato-recipes

ஆலு சோக்கா, பீஹார்

இது பொதுவாக உருளைக்கிழங்கை கடுகு எண்ணெய், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து மசிக்கின்றனர். சில சமயங்களில் வறுத்த தக்காளியும் சேர்க்கப்படுகிறது. இது அதன் தனித்துவமான மணமும் சுவையும் காரணமாக மிகவும் பிரபலமானது. இது லிட்டியுடன் பரிமாறப்படும். பீஹாரை நினைத்தாலே ஆலு சோக்கா நினைவிற்கு வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com