இந்தோரின் காலை அரச விருந்து: ‘போஹா – ஜிலேபி’ சுவையில் வாழும் நகரத்தின் தனி அடையாளம்!

ஹோல்கர் காலத்திலிருந்து வளர்ந்த இந்தோரி போஹா, ஜீராவன் மசாலா, சேவ், எலுமிச்சைச் சாறு சேர்ந்து சுவை கூட்டணியாக ஜிலேபியுடன் இணைந்து, சுத்தமும் சுவையும் கலந்த இந்தோரின் உணவுக் கதையை உலக வரைபடத்தில் பதிக்கிறது
indore-street-food
indore-street-food
Updated on

போஹா – ஜிலேபியின் வாசம் வீசும் இந்தோர்

அரசியலில் மட்டும் அல்லாமல், நாம் விரும்பி உண்ணும் உணவிலும் சரியான கூட்டணி சேர்ந்தால்தான் சுவை கூடும்.”

நமக்குத் தெரிந்த உணவு கூட்டணிகள்…

பஜ்ஜி – சமோசா, டீ – வடை, இட்லி – சாம்பார், பூரி – கிழங்கு மசாலா, சப்பாத்தி – சென்னா மசாலா… இதுதாங்க நமக்குப் பழக்கமான உணவு கூட்டணிகள்… ஆனா “போஹா – ஜிலேபி”ன்னு கேட்டிருக்கீங்களா?

அட, இது வெளிநாட்டுல இல்லங்க… நம்ம இந்தியாவுலதான்! வாங்க, அந்த சுவையான கதையை கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.

இந்தோரின் காலை அரச விருந்து:

இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் ஒரு சுவையைத் தன் அடையாளமாக வைத்திருக்கிறது. மதுரைக்கு ஜிகர்தண்டா, கொல்கத்தாவுக்கு ரசகுல்லா, அமிர்தசரஸுக்கு குல்சா என்றால், மத்தியப் பிரதேசத்தின் இதயமாகத் திகழும் Indore நகரத்திற்கு “போஹா – ஜிலேபி” தான் காலையின் அரச விருந்து.

விடியற்காலையின் மெல்லிய குளிரில், இந்தோர் நகரின் தெருக்கள் கண் விழிக்கும் நேரமே உணவின் வாசமும் விழித்துக்கொள்கிறது. பெரிய ஹோட்டல்கள் அல்ல; சின்னச் சின்ன கடைகள், தெரு மூலைகள், பழைய மரமேசைகள், வெந்த எண்ணெயின் மணம்—இவை எல்லாம் சேர்ந்ததே இந்தோரின் காலை இசை.

ஒரு தட்டில் மஞ்சள் நிறத்தில் மென்மையாகக் கிடக்கும் போஹா… அதன் அருகில் சர்க்கரைப் பாகில் மின்னும் சூடான ஜிலேபி… பார்ப்பதற்கே பசியை எழுப்பும் அந்த இணைப்பு, இன்று இந்தோரின் வாழ்வியலாக மாறிவிட்டது.

இந்தோரி போஹாவின் ரகசியம்

போஹா” என்பது நம் அவலைப் போன்றதே. ஆனால் இந்தோரில் அது ஒரு சாதாரண உணவு அல்ல. ஆவியில் வேகவைக்கப்பட்ட மென்மை, மேலே தூவப்படும் சேவ், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, வெங்காயத் துளிகள்—அனைத்திற்கும் மேலாக “ஜீராவன்” எனப்படும் அந்த நகரின் ரகசிய மசாலா—இவையெல்லாம் சேர்ந்தால்தான் “இந்தோரி போஹா” உருவாகிறது.

அதற்கு எதிரில் இனிப்பின் அரசியாக ஜிலேபி. காரமும் இனிப்பும் சந்திக்கும் அந்த நொடியில், நாக்கு மட்டுமல்ல மனமும் மகிழ்கிறது.

இதையும் படியுங்கள்:
துரித சமையல்: ஒரு பிரியாணி - ஒரு பூந்தி - ஒரு பக்கோடா!
indore-street-food

உணவின் பின்னாலுள்ள வரலாறு

இந்த உணவின் பின்னால் ஒரு வரலாறும் உண்டு. ஹோல்கர் அரசர்களின் காலத்தில், மகாராஷ்டிர உணவுப் பழக்கங்கள் மால்வா பிராந்தியத்துக்கு வந்தபோது, அங்கிருந்த போஹா இந்தோரின் மண்வாசையோடு கலந்தது. காலப்போக்கில் அது புதிய வடிவம் பெற்று இன்று நகரத்தின் அடையாளமாக உயர்ந்திருக்கிறது.

1940-களிலிருந்தே பல குடும்பங்கள் இந்தப் போஹா விற்பனையையே வாழ்வாதாரமாகக் கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சாப்பாட்டைத் தாண்டிய சமூக அனுபவம் Chappan Dukan போன்ற உணவுத் தெருக்களில் காலை ஆறு மணிக்கே கூட்டம் தொடங்கிவிடும்.

அலுவலகத்துக்குச் செல்லும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள்—அனைவரும் ஒரே வரிசையில் நின்று போஹா – ஜிலேபியை ரசிப்பார்கள்.

அங்கே உணவு என்பது வெறும் பசியாறும் விஷயம் அல்ல; அது ஒரு சமூக அனுபவம்.

சுத்தமும் சுவையும் சேர்ந்த நகரம்

Indore இன்று “இந்தியாவின் தெரு உணவுத் தலைநகர்” என்று அழைக்கப்படுகிறது. அதோடு, இந்தியாவின் சுத்தமான நகரம் என்ற பெருமையையும் தொடர்ந்து பெற்றுவருகிறது.

சுத்தமும் சுவையும் சேர்ந்து வாழும் நகரம் என்பதற்கே இந்தோர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சுவையில் வாழும் நகரம்

ஒரு நகரத்தை அதன் அரண்மனைகள் மூலம் மட்டும் அறிய முடியாது; அதன் காலை உணவின் மணம் மூலமும் அறியலாம்.

அந்த வகையில், Indore நகரம் இந்தியாவின் உணவுக் கலாசாரத்தில் தனி அத்தியாயம் எழுதியிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
யூரோப் சுற்றுலா (9) - விழுந்து எழுந்த அனுபவமும், வேறு பல இடையூறுகளும்...
indore-street-food

ஒருநாள் அதிகாலையில் இந்தோரின் தெருக்களில் நடந்துபாருங்கள். ஒரு கையில் சூடான ஜிலேபி, மற்றொரு கையில் மணமோடும் போஹா… அப்போது புரியும் — சில நகரங்கள் வரைபடத்தில் மட்டும் இல்லை; சுவையிலும் வாழ்கின்றன.

அட, நீங்க எங்க கிளம்பிட்டீங்க? ஜிலேபி வாங்கவா? இருங்க… Swiggy-ல order போட்டா hot ஜிலேபி 10 நிமிஷத்துல வந்துரும். அதுக்குள்ள நம்ம அவலை செஞ்சு வைப்போம் வாங்க!

logo
Kalki Online
kalkionline.com