
இண்டக்ஷன் அடுப்புகள் பாதுகாப்பானது, வேகமானது மற்றும் அதிக ஆற்றல் திறன் கொண்டது. காஸ் அடுப்புகளுடன் ஒப்பிடும்பொழுது இவை அதிக ஆற்றல் திறன் கொண்டதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.
இண்டக்ஷன் குக்டாப்பை திறம்பட பயன்படுத்துவதற்கு தட்டையான அடிப்பகுதியுடன் கூடிய சமையல் பாத்திரங்களை பயன்படுத்தவும். இவை சீராக வெப்பமடைய உதவும்.
பாத்திரத்தின் அடிப்பாகம் தட்டையாக இல்லாமல், சீரற்ற அடிப்பாகம் கொண்டிருந்தால் அது கண்ணாடி மேற்பரப்பில் அதிர்வை ஏற்படுத்தி, சீராக சூடாகாமல் போகலாம். அத்துடன் மிகவும் சிறிய அல்லது பெரிய பாத்திரம் கொண்டு சமைப்பது வெப்பத்தை சீராக பரப்பாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
இண்டக்ஷன் அடுப்புகள் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி பாத்திரங்களை சூடாக்குவதால் இண்டக்ஷன் ரெடி (induction ready) அல்லது இண்டக்ஷன் குக்டாப் குக்வேர் (induction cooktop cookware) என்று குறிக்கப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்தவும்.
கறைகளைத் தடுக்க சிந்தும் சமையல் உணவு துகள்களையோ, பால் போன்ற திரவப் பொருட்களையோ உடனடியாக சுத்தம் செய்யவும்.
இண்டக்ஷன் அடுப்புகள் மின்காந்தத்தைப் பயன்படுத்தி பாத்திரங்களை நேரடியாக சூடாக்குவதால் கேஸ் அடுப்பு மற்றும் மின்சார அடுப்புகளைவிட வேகமாக சமைக்கின்றன. எனவே சமையல் நேரத்தை கவனமாக கவனிக்கவும்.
உணவு விரைவாக சமைக்கப்படும் என்பதால் சமைக்கும் உணவின் தேவைக்கேற்ப வெப்பநிலையை சரிசெய்ய வேண்டும்.
இண்டக்ஷன் குக்டாப்புகள் நம்ப முடியாத அளவிற்கு மிகவும் வேகமாக வெப்பமடைவதால், சிறந்த கட்டுப்பாட்டிற்கு குறைந்த முதல் நடுத்தர வெப்ப அமைப்புகளை பயன்படுத்தலாம். இந்த அடுப்புகள் சீரான வெப்பத்தை வழங்குவதால் உணவுகளை எளிதாக சமைக்க முடிகிறது.
மேற்பரப்பில் கீறல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க பயனர் கையேட்டை பார்த்து சரியான பராமரிப்பு முறைகளை கையாளவேண்டும். சமையல் மேற்பரப்பை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது நல்லது.
காலியான பாத்திரங்களை அடுப்பில் வைத்து சூடாக்குவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை சேதத்தை ஏற்படுத்தும்.
வெப்பத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும், சமமாக சமைக்கவும், ஆற்றல் திறனை மேம்படுத்தவும் பாத்திரங்களை மூடிவைத்து சமைக்கவும்.
சில இண்டக்ஷன் குக்டாப்களில், சூப் மற்றும் ஸ்டூ போன்ற உணவுகளுக்கு சீரான மற்றும் மென்மையான சமையலுக்கு உதவும் சிம்மர் என்ஹான்சர் (simmer enhancer) போன்ற அம்சங்கள் உள்ளன. இவை குறைந்த வெப்ப நிலையில் சீரான சமையலுக்கு உதவுகின்றன.
இண்டக்ஷன் சமையல் பாதுகாப்பானது. ஏனெனில் கேஸ் அடுப்புகளில் உள்ள திறந்த சுடர் (தீப்பிழம்புகள்) போலன்றி, சமையல் மேற்பரப்பு நேரடியாக வெப்பமடைவதில்லை. இது விபத்துகளை தவிர்க்க உதவும்.
விரைவாக சூடாக்க பவர் பூஸ்ட் செயல்பாட்டை பயன்படுத்தவும். இவை அசைவ உணவுகள் அல்லது கொதிக்கும் நீருக்கு ஏற்றது.
வறுத்தல் போன்ற வேலைகளுக்கு சமைக்கும் நேரத்தை குறைப்பதற்கு பாத்திரங்களை முன்கூட்டியே சூடாக்கலாம்.
அடுப்பின் கண்ணாடி மேற்பரப்பில் கீறல்களை தவிர்ப்பதற்கு சமையல் பாத்திரங்களை எப்போதுமே மேற்பரப்பில் இருந்து இழுக்காமல் உயர்த்தி தூக்குவது நல்லது.