
மோர்க்களியும், முருங்கை சூப்பும் அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற ஆரோக்கியமான உணவுகளாகும். சத்து நிறைந்தவை.
கேரட் மிக்ஸ்ட் மோர்க்களி
தேவை:
* நல்ல (சலித்த) அரிசிமாவு --2 கப்
* புளித்த மோர் 2 கப்
* துருவிய கேரட் 1/4 கப்
* கடுகு 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு 1/2 டீஸ்பூன்
* இஞ்சி விழுது 1/2 டீஸ்பூன்
* மோர் மிளகாய் 6
* உப்பு தேவையானது
* ரீஃபைன்டு ஆயில் 5 டே.ஸ்பூன்
* பெருங்காயப்பொடி 1/4 டீஸ்பூன்
* கருகப்பிலை கொஞ்சம்
செய்முறை:
வாயகன்ற பாத்திரம் ஒன்றில் அரிசி மாவைப் போட்டு, அத்துடன் புளித்த மோர், சிறிது உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
அடிக்கனமான வாணலியை அடுப்பின் மீது வைத்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போட்டு வெடிக்கவிட்டு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவைகளைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் மோர்மிளகாய், இஞ்சி விழுது, கருகப்பிலை சேர்த்து சிறிது வதக்கவும்.
மோரில் கரைத்து வைத்திருக்கும் அரிசிமாவை வாணலியில் கொட்டி, கைவிடாமல் நன்கு கிண்டவும். கிளறிய மாவு நன்கு வெந்து பள-பளவென்று வருகையில், மீதமுள்ள எண்ணெய், துருவிய கேரட் மற்றும் பெருங்காயப்பொடி சேர்த்து மிக்ஸ் செய்யவும். மோர்க்களி ரெடி.
ஒரு தட்டில் சிறிது எண்ணெயை பரவலாகத் தடவி, இதில் வெந்த மோர்க்களியை மெதுவாக போட்டு, எண்ணெய் தடவிய கத்தியால் துண்டுகளாக்கி சாப்பிட, காரம், மணம், ருசியுடன் சுவையாக இருக்கும். ஆரோக்கியமான ஐட்டம் இந்த ஸ்பெஷல் மோர்க்களி.
ஸ்பெஷல் முருங்கை சூப்
தேவை:
* நல்ல முருங்கைக்காய் 2
* வெங்காயம் 2
* உருளைக்கிழங்கு 2
* எலுமிச்சம்பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு 2 பல்
* பச்சைமிளகாய் 2
* உருக்கியவெண்ணை 1/4 கப்
* மிளகு-சீரகப்பொடி 2 டீஸ்பூன்
* மஞ்சள்பொடி 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி இலை (ஃப்ரெஷ்) கொஞ்சம்
* உப்பு தேவையான அளவு
* தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் தோலை சீவிக்கொள்ளவும்.
முருங்கைக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு இவைகளை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய இம்மூன்றையும் குக்கரில் போட்டு கால் லிட்டர் தண்ணீர் விட்டு மூடி மூன்று விசில் வரும்வரை வேகவிடவும்.
பின்னர் மெதுவாக திறந்து, வெந்தவைகளை வெளியே எடுக்கவும். முருங்கைக்காய் சதைப்பகுதியைத் தனியாக எடுத்து விடவும். வெந்த உருளைக்கிழங்கு, வெங்காயம், முருங்கைக்காய் சதைப்பற்று இவைகளுடன் மிளகு-சீரகப்பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், உரித்த பூண்டு ஆகியவைகளை குக்கரில் வேகவைத்த தண்ணீரை விட்டு மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.
அரைத்த கலவையுடன் உருக்கிய வெண்ணை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியபின், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பிறகு, இதில் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி இலை கலந்து, கப்பில் விட்டுக் குடிக்கையில் அமிர்தமாக இருக்கும். கம-கமவென வாசனை வரும். சத்து நிறைந்த "முருங்கைக்காய் சூப்" உடலுக்கு ஆரோக்கியமானது.