

இட்லி, தோசை, பொங்கல், பிடி கொழுக்கட்டை என எதற்கும் பொருத்தமாக இருக்கும் இந்த சட்னியை இரண்டே நிமிடத்தில் செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் 1
பொட்டுக்கடலை 1/4 கப்
வேர்க்கடலை 1/4 கப்
பச்சை மிளகாய் 6
பூண்டு பற்கள் 4
உப்பு தேவையான அளவு
புளி நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி ஒரு கைப்பிடி
தாளிக்க:
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் 1,
உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
வறுக்க வேண்டாம், வதக்க வேண்டாம், ஈசியாக இரண்டே நிமிடத்தில் செய்து விடக் கூடிய சட்னி இது. முதலில் மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, தோல் நீக்கிய வேர்கடலை, பச்சை மிளகாய், பூண்டு பற்கள், உப்பு ,புளி ஆகியவற்றை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி பிறகு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து சிறிது நீர் விட்டு அரைக்கவும்.
சட்னி ரெடி. இதற்கு தாளிக்க நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் 1 கிள்ளி போட்டு தாளித்து சட்னியில் கொட்டி தேவையான அளவு நீர் கலந்து பரிமாறவும். அசத்தலான சுவையில் சட்னி தயார்.
சுவையான சிக்மங்களூர் சட்னி!
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
தனியா ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
பூண்டு 10
பச்சை மிளகாய் 6
தக்காளி 2
புதினா ஒரு கைப்பிடி
கருப்பு (அ) வெள்ளை எள் 1 ஸ்பூன் உப்பு தேவையானது
புளி சிறிது
தேங்காய் துருவல் 1/2 கப்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, சீரகம், எள் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். கலர் மாறியதும் பூண்டு பற்கள் 10, பச்சை மிளகாய்6, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். ஒரு கொத்து ஆய்ந்து சுத்தம் செய்த புதினா இலைகளைப் போட்டு தேவையான அளவு உப்பு, சின்ன எலுமிச்சை அளவு புளியையும் சேர்த்து கிளறவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும் சிறிது தண்ணீர் விட்டு சட்னியாக அரைத்தெடுக்க மிகவும் ருசியான சிக்மங்களூர் சட்னி தயார்.
இந்த சட்னி மிகவும் ருசியாக இருக்கும். இட்லி, தோசை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். செய்வதும் எளிது.
-K.S. கிருஷ்ணவேனி