
மினி லெமன் இட்லி
தேவை:
வரகரிசி - 3 கப்
கெட்டி அவல் - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு -
தாளிக்கத் தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வரகரிசி, உளுந்து இரண்டையும் நன்கு களைந்து நான்கு மணிநேரம் ஊறவிடவும். அவலைச் சுத்தம் செய்து களைந்து வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்கு நன்கு நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, தேவையான அளவு மாவை மினி இட்லிகளாக வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு. உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு தாளிக்கவும். அவை சிவந்தவுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப்புரட்டவும். ஏற்கெனவே இட்லியில் உப்பு சேர்த்திருப்பதால், தேவையான உப்பை மட்டும் எலுமிச்சைச் சாற்றுடன் சேர்த்து வாணலியில்விட்டு, பிறகு வெந்த இட்லிகளைச் சேர்க்கவும். அனைத்தையும் ஒன்றாக நன்கு கிளறி இறக்கவும். கம கம லெமன் மினி இட்லி ரெடி.
லெமன் ராகி சேமியா
தேவை:
ராகி சேமியா - 200 கிராம்
எலுமிச்சைச்சாறு - 3 டீஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரை கொதிக்க வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து ராகி சேமியா மூழ்கும் வரை ஊற்றி தனியே 5 நிமிடம் மூடிவைத்து பின்னர் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேர்க்கடலை சேர்த்து சிவக்க வறுத்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். வேகவைத்து வடிகட்டிய ராகி சேமியா, வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றை இந்த கலவையில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறி இறக்கவும். சுவையான லெமன் ராகி சேமியா ரெடி.
எலுமிச்சை சட்னி
தேவை:
காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
பெரிய எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்),
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பூண்டு - 3 பல்.
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பெரிய எலுமிச்சையாக இருந்தால் ஒன்று போதும். இல்லாவிட்டால் 2 எலுமிச்சைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பின் பூண்டு பற்களை நன்கு தட்டிக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பிறகு அதில் கடுகு சேர்த்து தாளித்து, தட்டி வைத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும். பின் தாளித்ததை சட்னியில் சேர்த்து கலந்தால், சுவையான லெமன் சட்னி தயார்.