
உலகத்தில் உள்ள தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு போன்ற உலோகங்களைப் போலவே அலுமினியம் என்பதும் ஓர் உலோகம் தான். தங்கமும், வெள்ளியும் பூமியில் தனி உலோகங்களாகக் காணப்படும். ஆனால் அலுமினியம் வெள்ளை களிமண்ணாகிய "பாக்சைட்" எனும் மண்ணிலிருந்தே உருவாக்கப்படுகிறது. இது உலகின் இலகுவான உலோகங்களில் ஒன்றாகும். இது இரும்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு இலகுவானது, ஆனால் இது மிகவும் வலிமையானது, மிகவும் நெகிழ்வானது மற்றும் அரிப்பை எதிர்க்கும். இது காந்தமாக்காது, இது ஒரு சிறந்த மின்சார கடத்தி மற்றும் நடைமுறையில் மற்ற அனைத்து உலோகங்களுடனும் இணைந்து உலோகக் கலவைகளை உருவாக்குகிறது.
நெப்போலியன் ஆட்சி காலத்தில் 1825-ம் ஆண்டு டென்மார்கைச் சேர்ந்த ஓர்ஸ்டடு (Oersted) என்ற விஞ்ஞானியால் தூய உலோக அலுமினியம் பிரித்தெடுக்கப்பட்டது. டேனிஷ் வேதியியல் விஞ்ஞானி ஆர்ஸ்டட் என்பவரும் டெலில் என்ற விஞ்ஞானியும் கடினமான முயற்சிக்கு பின்னர் அலுமினியம் உற்பத்தியை பெருவாரியாக செய்ய தொடங்கினர்.
அந்த நேரத்தில் ஒரு பவுண்டு எடையுள்ள அலுமினியத்தின் விலை 2725 ரூபாய். அதன் பிறகு அலுமினியம் அதிகளவில் தயாரிக்கப்பட்டதும் அதன் விலை 170 ரூபாயாக குறைந்தது, பல சோதனைகளுக்கு பின்னர் 1885-ம் ஆண்டு பாரீஸில் நடந்த கண்காட்சி ஒன்றில் முதன் முறையாக அலுமினியம் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது.
பளபளப்பான உறுதியான இந்த அலுமினிய உலோகத்தைக் கண்டு நெப்போலியன் மனதை பறிகொடுத்தார். இந்த உலோகத்தைக் கொண்டு எளிய ராணுவ தளவாடங்கள் செய்து விற்பனை செய்தால் உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று மனக்கோட்டை கட்டினார். இதனால் களிமண்ணில் இருந்து அலுமினியம் எடுக்கும் ஆய்வுகள் அதிகரிக்கும் படி உத்தரவு பிறப்பித்தார். அப்போது அலுமினியம் வெள்ளிக்கு இணையாக பார்க்கப்பட்டது. அலுமினியத்தில் செய்த பருந்து ஒன்று நெப்போலியன் மேஜையை அலங்கரித்தது. அலுமினியத்தில் செய்த ஸ்பூன்களை விருந்துகளுக்கு வந்த பிறநாட்டு மகாராணிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அதன் பின்னர் உலகின் பல நாடுகளில் மன்னர்களும், தூதர்களும் விருந்துகளுக்கு வரும் போது அலுமினியத்தில் செய்த ஸ்பூன்களை மட்டுமே பயன்படுத்த தொடங்கினர். சயாம் நாட்டின் மன்னர் ஒருவருக்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட அலுமினிய செயின் அவர் விஜயத்தின் போது பரிசளிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில்அமெரிக்காவில் சார்லஸ் மார்ட்டின் ஹால் மற்றும் பிரான்சில் லூயிஸ்-டௌசைன்ட் ஹெரோல்ட் 1886-ம் ஆண்டு அலுமினியத்தை வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் நவீன முறையைக் கண்டுபிடித்தார்கள். "பாக்சைட்" மண்ணை கொதிக்கும் சோடா உப்பில் போட்டு கரைத்து அதில் இரும்பு துகள்களைக் கலந்து அசுத்தங்களை அகற்றி பின்னர் "க்ரயோலைட்" எனும் உப்பில் கரைத்து அதில் மின்சாரம் பாய்ச்சி அலுமினியத்தை தனி உலோகமாக வெளிக்கொண்டு வந்தனர்.
இதன் பின்னர் தான் அலுமினியம் பாத்திரங்கள் முதல் ஆகாய விமானம், எடை குறைந்த படகுகள் வரை உருவாக்கப்பட்டன. இமயமலையில் உள்ள உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட டென்சிங் மற்றும் ஹில்லரியும் இமயமலையில் பனி சிகரங்களை கடந்து செல்ல தங்களுடன் அலுமினிய ஏணியைத் தான் எடுத்துச் சென்றனர்.
மற்ற உலோகங்களை விட குறைவான விலை கொண்டதால் அனைத்து வீடுகளிலும் அலுமினிய பாத்திரம் பயன்படுத்தப்படுகிறது. கிடைக்கும் வெப்பத்தை சுற்றுப்புறத்தில் இழந்துவிடாமல் உட்புறமாகக் கடத்தி சமைக்க வேண்டிய பொருளை விரைவில் சமைப்பதற்கு அலுமினிய பாத்திரங்கள் பயன்படுகின்றன.
அதிகப்படியான அலுமினிய பயன்பாடு மன ஆரோக்கியம், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நல்லதல்ல. இதை சாப்பிடுவதன் மூலம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதாகவும் அதனால் எலும்புகள் பாதிக்கப்படும் என்ற கருத்து உள்ளது.. அதிகப்படியாக உணவில் அலுமினியம் சேர்வது காரணமாக அல்சீமர் நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
அலுமினியம் என்பது இயற்கையான ஒரு தனிமம். இது உணவுடன் மிகக் குறைந்த அளவில் சமைக்கும் போது கலக்கிறது. இது தீங்கு விளைவிப்பதில்லை. அலுமினியப் பாத்திரங்களைப் பொறுத்தவரை, சமைக்கும் போது அதன் சில துகள்கள் உணவில் கலக்கின்றன. ஆனால், இவை அதிக தீங்கு விளைவிப்பதில்லை என்கிறார்கள்.
ஒருவருக்கு சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், அலுமினியத்தை அகற்றும் உடலின் திறன் குறைகிறது. இந்த சூழ்நிலையில் அவர்கள் அலுமினியம் பாத்திரங்களை தவிர்க்க வேண்டும். ஆனால், இது ஆரோக்கியமான மக்களுக்கு எந்த மோசமான விளைவையும் ஏற்படுத்தாது. அளவாக பயன்படுத்தினால் அலுமினிய பாத்திரங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் அனோடைஸ் செய்யப்பட்ட அல்லது துருப்பிடிக்காத எஃகு அலுமினியத்தையும் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.