
சுவையான சில ரெசிபிக்களை அதிகமாக செய்து வைத்துக்கொண்டால், அதையே இரண்டு மூன்று பலகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோல் இந்த உக்காரையும் செய்து பயன்படுத்தலாம்.
கடலைப்பருப்பு உக்காரை
செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு -அரை கப்
வெல்லத் துருவல் -முக்கால் கப்
தேங்காய்த் துருவல்- கால் கப்
நறுக்கிய முந்திரி, நட்ஸ் ஃப்ளேக்ஸ் தலா- ஒரு டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை- 15
ஏலப்பொடி -அரை டீஸ்பூன்
நெய்- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைத்து தண்ணீரை வடிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் வடித்த பருப்புடன் வெல்லத்தூள், ஏலக்காய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு பருப்பு கெட்டி பதத்திற்கு வரும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் இதனுடன் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து உக்காரையை இறக்கிப் பரிமாறவும்.
இதை நன்றாக கெட்டியாக கிளறிக்கொண்டு கொழுக்கட்டைக்கு பூரணமாகவும், உப்பட்டு செய்யும் பொழுது அதற்குள் வைக்கும் பூரணமாகவும், மைதா மாவை சொப்பு செய்து அதற்குள் வைத்து ஸ்டப் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மிகவும் ருசியாக இருக்கும். சும்மா சாப்பிட்டால் ருசியோ ருசி. பொங்கலுக்கு செய்து அசத்துங்க.
பூண்டு சட்னி
செய்ய தேவையான பொருட்கள்:
நசுக்கிய பூண்டு பல்- 5
மிளகாய் பொடி -ஒரு டீஸ்பூன்
இட்லி பொடி- ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய்- ரெண்டு டேபிள் ஸ்பூன்,
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
நசுக்கிய பூண்டுடன் பொடிகளை ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து கிளறவும். எண்ணெயை சூடாக்கி இதில் ஊற்றி கிளறவும். அசத்தலான வாசனை வரும். இந்த டூ மினிட்ஸ் சட்னியை இட்லி தோசை உடன் தொட்டுக்கொள்ள ருசி அள்ளும். பொறுமையாக சாப்பிடுபவரையும சீக்கிரமாக சாப்பிட கூப்பிடும்.