சுகரைக் கட்டுப்படுத்தும் கம்பு பணியாரம்!
இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் என்பது பலரையும் பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறிவிட்டது. இதனால் பாரம்பரிய உணவுப் பொருட்களின் மீதான கவனம் அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் கம்பு. கம்பில் நார்ச்சத்து, புரதம் பல்வேறு விட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும். எனவே, இந்தப் பதிவில் கம்பு பயன்படுத்தி பணியாரம் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
பணியாரம் என்பது தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு சிற்றுண்டி. இது பொதுவாக அரிசி மாவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால், அரிசிமாவிற்கு பதிலாக கம்பு மாவைப் பயன்படுத்தி பணியாரம் தயாரிப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். கம்பு பணியாரம் சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதால், அனைவரும் இதை ஒருமுறையாவது முயற்சிக்க வேண்டும்.
கம்பு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 1 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
காய்கறிகள் (கேரட், பீன்ஸ்) - நறுக்கியது
வெங்காயம் - நறுக்கியது
பச்சை மிளகாய் - நறுக்கியது
கருவேப்பிலை
எண்ணெய்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கம்பு பணியாரம் செய்வதற்கு முதலில் கம்பு, உளுந்து மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த மாவில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பின்னர், பணியார சட்டியை அடுப்பில் வைத்து, லேசாக எண்ணெய் தடவி சூடானதும், பணியார மாவை ஊற்றி பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால், சூப்பரான சுவையில் கம்பு பணியாரம் தயார்.
கம்பு ஒரு பழங்கால தானியமாகும். இது பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது. கம்பில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தருகிறது. இதனால், அடிக்கடி பசி எடுப்பது குறைந்து அதிகமாக உணவு உட்கொள்ளப்படுவது தவிர்க்கப்படும். மேலும் கம்பில் உள்ள குறைந்த கிளைசெமி குறியீடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்துவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த உணவாகும்.