

சாம்பார் என்றாலே ,அதில் முக்கியமானது துவரம் பருப்பு தான். துவரம் பருப்பு தான் சாம்பாருக்கு முக்கிய சுவையை கொடுக்கிறது. துவரம் பருப்பு மட்டுமல்லாது , பாசிப் பருப்பு கூட சில இடங்களில் சுவைக்காக சாம்பாரில் சேர்க்கப்படுகிறது. ஆனால் , துவரம் பருப்பு இல்லாத சாம்பாரும் சுவையாக செய்யப்படுகிறது. கர்நாடகாவின் மைசூரை சுற்றியுள்ள சில பகுதிகளில் பாரம்பரியமாக துவரம் பருப்பு இல்லாமல் சாம்பார் செய்யப்படுகிறது.
பருப்பு மட்டுமல்லாமல் வெங்காயம் , தக்காளி , பூண்டு ஆகியவையும் இந்த சாம்பாரில் சேர்ப்பதில்லை என்பது இதன் சிறப்பு. பிரதானமாக கர்நாடகாவின் கோயில்களில் இந்த சுவையாக பருப்பு இல்லாத சாம்பார் , அன்னதாகத்தில் வழங்கப்படுகிறது. இந்த சுவையான சாம்பார் எவ்வாறு செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.
மைசூர் ஸ்பெஷல் கோயில் சாம்பார்:
தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள் : 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு : 1 தேக்கரண்டி
உளுந்து : 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் : 2 தேக்கரண்டி
வர மிளகாய் : 5
காஷ்மீரி மிளகாய் : 3
தனியா : 2 தேக்கரண்டி
பட்டை : சிறிய துண்டு
கிராம்பு : 2
மிளகு : அரை தேக்கரண்டி
கருவேப்பிலை : அரைக் கைப்பிடி
கடுகு : 2 தேக்கரண்டி
வெந்தயம் : அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் : 1 கப்
புளி: நெல்லிக்காய் அளவு
வெல்லம் : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : ஒரு மேஜை கரண்டி
பரங்கிக்காய் : 1 கப்
உருளைக் கிழங்கு : 1
கேரட் : 1 கேரட்
மல்லிதழை : சிறிது
செய்முறை :
ஒரு கடாயில் முதலில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை விட்டு அதில் கடலைப் பருப்பு , உளுந்து , பெருங்காயத் தூள் ஆகியவற்றை இட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
அதனுடன் வர மிளகாய் , காஷ்மீர் மிளகாய் , மஞ்சள் தூள் , தனியா விதைகள் ஆகியற்றவையும் கலந்து மிதமான தீயில் வறுக்க வேண்டும் .
இதில் பட்டை துண்டையும் , கிராம்பையும் சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும். இந்த கலவையில் கருவேப்பிலை சிறிது , மிளகு , தேங்காய் துருவல் ஆகியவற்றையும் சேர்த்து , தேங்காயில் நீர் வற்றும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இப்போது இதில் புளியை சிறிது சிறிதாக சேர்த்து வதக்கவும். இதன் பின்னர் ஒரு தேக்கரண்டி வெல்லத்தையும், ஒரு தேக்கரண்டி கடுகையும் இட்டு மிதமாக வதக்கி , இந்த கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும்.
மறுபுறம் ஒரு அடி கனமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் விட்டு நறுக்கிய கேரட் , நறுக்கிய , உருளைக் கிழங்கு , நறுக்கிய பரங்கிக்காய் அல்லது பூசணிக்காய் ஆகியவற்றை சேர்த்து , வேகம் அளவிற்கு நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
தட்டில் ஆற வைத்துள்ள கலவையை மிக்ஸியில் இட்டு , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை வேக வைத்துள்ள காய்கறிகளுடன் சேர்த்துக் கிளறி விடவும் .
இந்த கலவையை பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும். இப்போது சாம்பார் கெட்டியாக மாறத் தொடங்கும் , தேவைக் கேற்ப சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
கடுகு , வெந்தயம் , கருவேப்பிலை , பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெயில் தாளித்து சாம்பாரில் கொட்டவும் . சாம்பாரின் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி சாம்பாரை இறக்கி விடவும்.
இப்போது சுவை மிகுந்த மைசூர் ஸ்பெஷல் கோயில் சாம்பார் தயாராகி விட்டது. இது சாதம் , இட்லி , தோசைக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.