கர்நாடகத்தில் மிகவும் பிரபலமான எளிமையான முறையில் செய்யக்கூடிய நீர் தோசையும், நீர் சட்னியும் எவ்வாறு செய்யலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.
நீர் தோசை:
தேவையான பொருள்கள் :
பச்சரிசி - ஒரு கப்
தேங்காய் - அரை கப் (வெள்ளை வெளேரென்று பூப்போல இருக்க வேண்டும்)
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கப் பச்சரிசியை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி நன்கு ஊறியவுடன் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் தேங்காயும் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த மாவுடன் இரண்டு கப் தண்ணீர், சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். மாவு நல்ல தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும். ஒரு கப் அரிசிக்கு 3 கப் அளவுக்கு தண்ணீர் வைப்பது சரியாக இருக்கும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்கு சூடான உடன் ரவை தோசை ஊற்றுவது போன்று மேலிருந்து ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான நீர் தோசை ரெடி.
குறிப்பு:
திருப்பிப் போடக் கூடாது!
மாவு புளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீர் சட்னி :
தேவையான பொருட்கள் :
உளுந்தம் பருப்பு- 1/2 ஸ்பூன்
உடைச்ச கடலை - 1/2 கப்
பச்சை வேர்க்கடலை- 1/2 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய்- 2
தேங்காய்-1/2 கப்
உப்பு- தேவையான அளவு
தாளிப்பதற்கு :
கருவேப்பிலை - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு -1/4 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
வர மிளகாய் -2
பெருங்காயத்தூள் -1/4 ஸ்பூன்
செய்முறை:
ஒரு வானொலியில் உளுந்தம் பருப்பு, பச்சை வேர்க்கடலை, உடைச்ச கடலை, பச்சை மிளகாய், புளி, கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த கலவையை நன்கு ஆறவைத்து அதனுடன் தேங்காய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் தாராளமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்தவுடன் சட்னியில் சேர்த்து கலந்தால் சுவையான நீர் சட்னி ரெடி.