

அடை பிரதமன் பாரம்பரியமான கேரள இனிப்பு வகையாகும். கேரளாவில் ஓணம் பண்டிகை அன்று தவறாமல் எல்லா வீடுகளிலும் அடை பிரதமன் செய்வார்கள். தலைவாழை இலையோடு அறுசுவை உணவுடன் பரிமாறப்படும். மற்ற பாயாசங்களுடன் ஒப்பிடுகையில், அடை பிரதமன் ‘பாயாசங்களின் அரசன்’ என்று அழைக்கப்படுகிறது.
அடை பிரதமன் செய்ய தேவையான பொருட்கள்:
அடை-100 கிராம்
வெல்லம்-200 கிராம்
தண்ணீர் ஊற்றாமல் எடுத்த தேங்காய் பால்-1 கப்.
தண்ணீர் சிறிது ஊற்றி எடுத்த தேங்காய் பால்-1கப்
தண்ணீர் நன்றாக ஊற்றி எடுத்த தேங்காய் பால்-2 கப்.
நெய்-2 தேக்கரண்டி
முந்திரி-10
தேங்காய் துண்டுகள்-1/2 கப்
ஏலக்காய் தூள்-1//4 தேக்கரண்டி.
அடை பிரதமன் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் 100 கிராம் அடை எடுத்துக் கொள்ளவும். இது அரிசியால் செய்யப்பட்ட மெல்லிதான துண்டுகளாக பிளேக்ஸ் போன்று இருக்கும். சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். அதனுடன் 7கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
இப்போது வெந்த அடையை வடிகட்டி விட்டு பிறகு தண்ணீரில் நன்றாக அலசவும். தண்ணீரில் அலசினால் தான் பாயாசம் செய்யும் போது அதில் ஒட்டிக் கொண்டிருக்காமல் உதிரியாக இருக்கும்.
பாகு செய்வதற்கு 200 கிராம் வெல்லத்தை ஒரு ஃபேனில் சேர்த்துவிட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். சக்கரை கொதித்து கரைந்ததும் அதை வடிக்கட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் சர்க்கரை பாகை ஊற்றி ஏற்கனவே செய்து வைத்திருந்த அடையை அதில் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பாயாசம் நன்றாக சுண்டி வர வேண்டும்.
இப்போது தேங்காய்ப்பாலை இதனுடன் சேர்க்க வேண்டும். தேங்காய்ப்பாலை மூன்று விதமாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். 1. தண்ணீர் ஊற்றாமல் பிழிந்த தேங்காய் பால், 2. தண்ணீர் சிறிது ஊற்றி பிழிந்த தேங்காய் பால், 3. தண்ணீர் நன்றாக சேர்த்து எடுத்த தேங்காய் பால்.
இப்போது மூன்றாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை 2 கப் பாயசத்தில் சேர்க்கவும். அது நன்றாக சுண்டியதும் 2ஆவதாக எடுத்த 1கப் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக தண்ணீர் சேர்க்காமல் எடுத்து வைத்த தேங்காய் பால் 1கப்பை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
ஒரு ஃபேனில் 2 தேக்கரண்டி நெய்யை சேர்த்து அத்துடன் ½ கப் தேங்காய் துண்டுகளை நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். அதை எடுத்து வைத்து விட்டு அதே நெய்யில் 10 முந்திரி பருப்பை வறுத்து எடுத்து கொள்ளவும். இப்போது வறுத்து வைத்த தேங்காய் துண்டுகள், முந்திரி பருப்பு, வாசத்திற்கு ¼ தேக்கரண்டி ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான அடை பிரதமன் தயார். வாயில் போட்டதும் அப்படியே கரைந்துவிடும் டேஸ்டாகவும் இருக்கும். நீங்களும் வீட்டில் செய்து பாருங்க...