
கேரளா மாகாணத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கோதுமை ஒரட்டி ஒரு சத்தான மற்றும் எளிய முறையில் தயாரிக்கக்கூடிய உணவாகும். இது பொதுவாக காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் பரிமாறப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
கோதுமைமாவு – 2 கப்
துருவியதேங்காய் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
நீர் – தேவையான அளவு
நெய் – சிறிது
பச்சைமிளகாய் – 2 (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 1 (நறுக்கியது)
சீரகம் – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – சில
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமைமாவு, துருவிய தேங்காய், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து, கொதிக்கும் நீரை மெதுவாக மாவில் சேர்த்து, ஒரு மரக்கோலால் கிளறி, ஒட்டும் தன்மையுள்ள மாவாக மாற்றவும். மாவை கைகளால் நன்றாக பிசைந்து, மென்மையான மற்றும் சற்று ஒட்டும் தன்மையுள்ள மாவாக மாற்றவும்.
தவாவில் சிறிது நெய் தடவி, மாவை சிறிய உருண்டைகளாக பிரித்து, ஈரமான கைகளால் தடவி, சுமார் ¼ அங்குலம் தடிப்புள்ள வட்ட வடிவமாக பரப்பவும். மிதமான சூட்டில் தவாவில் ஒரட்டியை வைக்கவும். ஒரு பக்கம் சுட்டதும், மறுபக்கம் திருப்பி, இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை சுடவும். வெண்ணெய் அல்லது நெய் தடவி, சூடாக பரிமாறவும்.
கோதுமை ஒரட்டியை தேங்காய் சட்னி, மாங்காய் ஊறுகாய் அல்லது தயிருடன் பரிமாறலாம்.
பால் கஞ்சி மற்றும் புழுக்கு Puzhukku என்பது கேரளாவின் பாரம்பரிய காம்பினேஷன் ஆகும், இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் நிவாரண உணவாகும்.
பால் கஞ்சி
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ½ கப்
தண்ணீர் – 2 கப்
பால் – 1 கப் (தெளிந்த பால் அல்லது தேங்காய் பாலும் பயன்படுத்தலாம்)
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை: அரிசியை சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அரிசி நன்கு வெந்து, குழம்பு போன்று ஆனதும் பாலை சேர்க்கவும். பாலை சேர்த்து மேலும் 5-10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும். இறுதியாக உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். தேங்காய் பால் பயன் படுத்தினால், இயற்கையான சுவை அதிகமாக இருக்கும்.
புழுக்கு
தேவையான பொருட்கள்:
சேனை, உருளைக்கிழங்கு , கொத்தவரங்காய் (நறுக்கிய துண்டுகள்) கொண்டைக்கடலை, கொள்ளு –(முழுவதும் சேர்த்து) 2 கப்
துருவிய தேங்காய் – ½ கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – சில
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அனைத்து கிழங்கு வகைகளையும் தோல் கிழித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கொண்டைக்கடலை, கொள்ளு, முதலியன முன்பே ஊற வைத்து வேக வைக்கவும். காய்கறிகளையும் வேகவைத்து தனியாக வைக்கவும். தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாயை சதைத்து அரைக்கவும். எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து, வேகவைத்த பயிறுவகைகள், காய்கறிகளை சேர்க்கவும். அரைத்த தேங்காய் மசாலாவையும் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் வேகவிடவும். இறுதியில் தேங்காய் எண்ணெய் தெளித்து கிளறி இறக்கவும்.
பால் கஞ்சி – சூடாக பரிமாறவும். புழுக்கு பால் கஞ்சியுடன் சேர்த்து பரிமாறும்போது அதற்கென்று ஒரு தனி சுவை உண்டு.