
சில நேரம் சமைத்துக்கொண்டே இருப்போம். ஏதாவது அதில் ஒரு சிறு குறை ஏற்பட்டுவிடும். அதை அந்த நேரத்தில் நிவர்த்தி செய்து விட முடியாமல் தவிப்போம். அப்பொழுது யாராவது அதை சரி செய்வதற்கான வழிமுறையை கூறமாட்டார்களா என்று யோசிப்பது உண்டு. அப்படிப்பட்ட வேலையில் உதவும் சில டிப்ஸ்கள் இதோ.
எலுமிச்சை சாதம் செய்யும்போது ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு ,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். அதில் தாளித்ததை ஊற்றி கலக்கிய பிறகு மொத்தமாக சேர்த்து சாதத்தில் கிளறினால் கூடுதல் சுவையுடன் எலுமிச்சை சாதம் இருக்கும். உப்பும் நன்றாக கலந்திருக்கும்.
மக்காச்சோளத்தை அவிக்கும்போது அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் அதன் இயல்பான இனிப்பு வந்துவிடும்.
கொப்பரைத் தேங்காய், வறுத்த வேர்க்கடலை, வறுத்த எள் இவற்றை நன்றாக அரைத்து குருமாவில் சேர்த்தால் குருமாவின் ருசியே அபாரமாக இருக்கும்.
குருமா, கூட்டு வகைகளில் ஸ்வீட் கார்னை சேர்த்து செய்தால் மாறுபட்ட சுவையுடன் அசத்தலாக இருக்கும்.
சில நேரங்களில் கிரேவியான ஐட்டம் செய்யும் பொழுது காரம் கூடிவிட்டால் அதில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து பாருங்கள். காரம் கணிசமாக குறைந்து புது ருசி கிடைக்கும்.
ஏதாவது கேசரி வகைகள் செய்யும் பொழுது தண்ணீர் அதிகமாகி நீர்த்தார் போல் இருந்தால் அதில் சிறிதளவு கோதுமை மாவு அல்லது கடலை மாவை நெய்யில் வறுத்து கலந்து பாருங்கள் சுவையும், கலரும், வாசமும் சேர்ந்து கெட்டியான பதம் வந்துவிடும். இல்லையேல் சம அளவு பாதாம், முந்திரியை மிக்ஸியில் பொடித்து சேர்த்தாலும் சூப்பராக இருக்கும். கெட்டித் தன்மை கிடைக்கும்.
தேங்காய் பால் ஊற்றி செய்யும் குழம்புகளுக்கு அடுப்பிலிருந்து குழம்பை இறக்கும்போதுதான் பால் ஊற்றவேண்டும். இல்லை என்றால் பால் திரிந்து குழம்பின் சுவை மாறிவிடும்.
சப்பாத்திக்கு குருமா தயாரிக்கும்போது அதில் சிறிதளவு பச்சை திராட்சை, பச்சை கிஸ்மிஸ் பழம் சேர்த்து செய்தால் குருமா அசத்தலாக இருக்கும்.
இட்லி பொடி, பருப்பு பொடி, கருவேப்பிலை , சுண்டைக்காய் பொடி வகைகள் அரைக்கும் பொழுது அதில் சிறிதளவு ஆளி விதையை வறுத்து சேர்த்தால் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புரதச்சத்துடன் சேர்த்து கிடைக்கும். இது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
பூண்டுக்குழம்பு, முள்முருங்கை குழம்பு செய்து இறக்கும் பொழுது மிளகு, சீரகத்தை வறுத்து பொடித்து போட்டால் சுவையாக இருக்கும்.
தேங்காய் சட்னியில் காரம், உப்பு அதிகமாகிவிட்டால் மல்லித்தழை சேர்த்து அரைத்துப் பாருங்கள். இரண்டும் சமமாவதுடன் ருசியும் சூப்பராக இருக்கும்.
தோசை கல்லில் லேசாக எண்ணெய் விட்டு பன்னீர் துண்டங்களை சிவக்க புரட்டி எடுத்து அதை உப்பு தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து மசாலா குருமா போன்றவை செய்தால் பன்னீர் ம்ருதுவாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
சில நேரம் பூந்தி லட்டு பிடிக்கும்போது உதிர்ந்து விழும். காரணம் பாகும் முற்றி போய் எண்ணெயில் பொரித்த பூந்தியும் முழுசாக வெந்து இருப்பதால்தான் இதுபோல் உதிரும். அதற்கு கம்பி பாகு வைத்து முக்கால் பதம் வெந்த பூந்தியை பாகில் கலந்து சூட்டோடு உருண்டை பிடித்து விடவேண்டும். இப்படி செய்தால் லட்டு கெட்டியாகிவிடும் உதிராது.
முறுக்கு, தட்டை எதுவும் நமுத்து போகாமல் இருக்க அதற்கான அரிசி மாவை சலித்து, வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து பிறகு மாவை பிசைந்து செய்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.
மிக்சருக்கு போடுவதற்கு பொரிக்கும் வேர்க்கடலை, கறிவேப்பிலை, பருப்பு வகைகளை ஒரு வலை கரண்டியில் போட்டு கொதிக்கும் எண்ணெயில் பிடித்தால் ஒன்று போல் வறுபட்டு இருக்கும். சட்டென்றும் பொரித்து எடுத்து விடலாம். மிக்சரில் போட்டு பார்க்கும் போது ஒரே சீராக அழகாகவும் இருக்கும்.