சமையலறை சந்தேகங்கள் சமாளிப்புகள்..!

Kitchen Doubts Solutions..!
Samayal tips
Published on

பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், அதனுடன் சிறிது ரவையைக் கலந்துவிட்டால் கெட்டியாகிவிடும்.

தோசைமாவு சற்றுப் புளித்துப்போயிருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கித்தாளித்துப் போட்டு ஊத்தப்பமாக ஊற்றி எடுக்கலாம். ருசியாக இருக்கும்.

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் வாழை இலை ஓரத்தில் இருக்கும் தண்டிலிருந்து ஒரு தண்டு நறுக்கிப்போட்டால் உப்பு குறைந்துவிடும்.

சமையலுக்குப் பயன்படுத்தும் பெருங்காயம் கட்டியாகிவிட்டதா? பெருங்காய டப்பாவில் இரண்டு பச்சை மிளகாயை போட்டு வையுங்கள். இளகிவிடும்.

எலுமிச்சை ஊறுகாய் துண்டுகள் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பேஸ்ட்டில் கேரட்டைத் துண்டுகளாக்கிப் போட்டு ஊறவையுங்கள்.  தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள  ருசியாக இருக்கும்.

அரிசியின் பழைய வாசனைபோக வேகும்போது ஏலக்காய், அல்லது சோம்பை நறுக்கிப்போட்டால் ரேஷன் அரிசி நெடி கூட நீங்கிவிடும்.

கொத்துமல்லி சட்னி மீந்துவிட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர்போல் சுவையாக இருக்கும்.

இட்லி மாவு புளித்துவிட்டால் ஒரு டம்ளர் பால் விட்டால் புளிப்புச்சுவை குறைந்துவிடும்.

இரவில் மிஞ்சிய பழைய சாதத்துடன் மைதாமாவைக் கலந்து,மிக்ஸியில் அரைத்து, நெய்விட்டு தோசை வார்த்தால் சுவை அபாரமாக இருக்கும்.

பருப்பு வடை மீந்துவிட்டால் வடைகறி செய்யலாம். அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கிளறி இறக்க உசிலி சுவையாக இருக்கும்.

சட்னியில் உப்பு அதிகமாகிவிட்டால், உருளைக்கிழங்கை  இரண்டாக வெட்டி அதில் போட்டால் உப்பை உறிஞ்சிவிடும்.

சாம்பாரில் புளிப்புச் சுவை அதிகமாகிவிட்டால் ஒரு துண்டு வெல்லம் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். புளிப்புச்சுவை மட்டுப்படும்.

இதையும் படியுங்கள்:
பஞ்சாப் ஸ்பெஷல் மாத்ரி செய்யலாம் வாங்க!
Kitchen Doubts Solutions..!

கார பட்சண டிப்ஸ்!

சீடை, முறுக்கு, தட்டை போன்ற எந்த பட்சணங்கள் செய்யும்போதும் சிறிது தேங்காய்ப் பால் விட்டுச்செய்தால் சுவையாக இருக்கும்.

ஒரு கரண்டி எண்ணெய் அல்லது  நெய் அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றி, பிறகு மாவைக் கரைத்து பஜ்ஜி சுட்டால் வாசனையாக இருக்கும்.

முறுக்கு மாவு பிசையும்போது அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, மாவை நன்கு பிசைந்து  முறுக்கு சுட்டெடுத்தால் நெய்மணத்துடன், கூடுதலான சுவையுடன் முறுக்கு இருக்கும்.

சிப்ஸ், காராபூந்தி ஆகியவற்றை தயார் செய்யும்போது காரத்திற்கு மிளகாய்த்தூள் போடுவதற்கு  பதிலாக மிளகுத்தூள் போடலாம். காரம் குறைவாக இருக்கும்.

வேகவைத்த கொண்டைக் கடலையுடன், வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு, சாட் மசாலா, உப்பு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்துச் செய்யும் சுண்டல், மாறுதலான சுவையுடன் இருக்கும்.

இஞ்சியையும், வெள்ளைப் பூண்டு பற்களையும் அரைத்துக் கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையான பஜ்ஜி ரெடி.

வாழைத்தண்டை பொடிப்பொடியாய் நறுக்கி பக்கோடாவுக்கு கலந்து வைத்துள்ள மாவில் போட்டுப் பிசைந்து எண்ணெயில் போட்டு எடுத்தால், வெங்காயப் பக்கோடா மாதிரி சுவையான பக்கோடா  கிடைக்கும்.

வடை, போண்டா, பஜ்ஜி பொரிக்கும்போது சிறிது உப்பு போட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.

ரிப்பன் நாடா முறுக்கு செய்யும்போது அரிசிமாவு, கடலை மாவுடன் இரண்டு ஸ்பூன் உளுத்த மாவையும் சேர்த்தால், எண்ணெய் அதிகம் குடிக்காது. கரகரப்பும் கூடும்.

தட்டு அல்லது தாம்பாளத்தில் வெண்ணைய் தூள், உப்பு  இரண்டையும் போட்டு நன்கு குழைத்து, முறுக்கு மாவில் சேர்த்துப் பிசைந்தால் மாவு நல்ல பதமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com