

நூல்கோல் கிரேவி
தேவை:
நூல்கோல் - 2
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள், தனியா தூள், மிளகுதூள், சோம்பு - தலா 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நூல்கோலை தோல் சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடுத்து பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பின்பு ஒரு குக்கரில் நறுக்கி வைத்துள்ள நூல்கோல் துண்டுகளைப் போட்டு, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சோம்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறவைக்கவும். வதக்கிய பொருட்கள் ஆறியதும், அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து இப்போது அதே வாணலியில் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் குக்கரில் வேகவைத்து வைத்துள்ள நூல்கோல் துண்டுகளைப் போடவும்.
நூல்கோலும், அரைத்த விழுதும் ஒன்றாக கலந்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான நூல்கோல் கிரேவி ரெடி.
நூல்கோல் சூப்
தேவை:
நூல்கோல் - 2
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். நூல்கோலைதோல் சீவியப் பொடியாக அரிந்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
நூல்கோல் அரை வேக்காடு வெந்ததும், வெங்காயம், தக்காளியை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கிவிடுங்கள். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் கேரட் துருவலைச் சேர்த்து வதக்குங்கள்.
பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து மிளகுத் தூளைத் சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து, கொதிக்கும் சூப்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறுங்கள். சூப்பரன நூல்கோல் சூப் ரெடி.
நூல்கோல் ராய்தா
தேவை:
நூல்கோல் – ஒன்று,
இஞ்சி – சிறு துண்டு,
பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, கெட்டித் தயிர் – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நூல்கோலை தோல் சீவி துருவவும். கொத்தமல்லி தழையுடன், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். கெட்டித் தயிரைக் கடைந்து உப்பு, அரைத்து வைத்த விழுது, துருவிய நூல்கோல் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, நூல்கோல் – தயிர் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும். சுவையான நூல்கோல் ராய்தா ரெடி.