

வீட்டிலேயே பேக்கரி ஸ்டைலில் 5 விதமான பிரெட் ஸ்நாக்ஸ் ரெசிபிகள் செய்யலாம் என இந்த கட்டுரை விளக்குகிறது. பிரெட் குலோப் ஜாமூன், கிரீன் சாண்ட்விச், மொறு மொறு பிரெட் போண்டா, சுவையான பிரெட் பணியாரம், ஆனியன் பொடிமாஸ் ஆகியவை எளிய பொருட்களால், குறைந்த நேரத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
1. பிரெட் குலோப் ஜாமூன்
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் - 8
காய்ச்சிய பால் - 5 டீ ஸ்பூன்
நெய் - பொரிக்க
செய்முறை:
பிரெட் துண்டுகளின் ஓரங்களில் இருக்கும் பழுப்பு நிறப் பகுதிகளை கத்தியால் வெட்டி நீக்கிவிடவும். வெள்ளை நிற பிரெட் பகுதிகளை மிக்ஸியில் போட்டு ஒரே ஒரு சுற்று சுற்றி தூளாக்கிக் கொள்ளவும். இந்த பிரெட் தூளுடன் காய்ச்சிய பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து மென்மையான மாவாக பிசைந்து கொள்ளவும் (அதிகம் அழுத்தக் கூடாது).
சிறிய உருண்டைகளாக உருட்டி, மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து, சர்க்கரை பாகில் 1 மணி நேரம் ஊறவைத்து பரிமாறவும். சூப்பர் சுவையில் பிரெட் குலோப் ஜாமூன் தயார்.
2. பிரெட் கிரீன் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் - 6,
நெய் - சிறிது,
தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
கோஸ் - கேரட் (இரண்டும் சேர்த்து) - கால் கப்,
துருவிய பனீர் - 2 டஸ்பூன்,
வெண்ணெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
சட்னி செய்ய:
புதினா - ஒரு கைப்பிடி,
பூண்டு - 4 பல்,
பச்சை மிளகாய் - ஒன்று,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
துருவிய கேரட், கோஸ், பனீர், உப்பு ஆகியவற்றுடன் தக்காளி சாஸ் ஊற்றிக் கலந்துகொள்ளவும். சட்னி செய்ய கொடுத்துள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி, ஒருபுறத்தில் சட்னியைத் தடவவும்.
இதன் மீது கலந்து வைத்துள்ள காய்கறி - சாஸ் கலவையை வைத்து, சட்னி தடவிய மற்றொரு பிரெட் துண்டை வைத்து மூடவும். தோசைக்கல்லில் நெய் சிறிது ஊற்றி சாண்ட்விச்சை இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும். அருமையான சுவையில் க்ரீன் பிரெட் சாண்ட்விச் ரெடி.
3. பிரெட் போண்டா
தேவையான பொருட்கள்:
பெரிய பிரட் துண்டுகள் - 10 (ஓரம் நீக்கவும்),
எண்ணெய் - தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (துருவவும்),
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கவும்), மிளகாய்த் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - சிறிதளவு, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி - 10 (துண்டுகளாக்கவும்),
நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
சிறிதளவு எண்ணெயில் தக்காளி, வெங்காயத்தை வதக்கி உப்பு, மஞ்சள்தூள், புதினா, முந்திரி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகள் செய்யவும்.
பிரெட்டை நீரில் நனைத்து எடுத்து, உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிந்து, உருட்டிய மாவை பிரெட் நடுவே வைத்து நன்கு மூடி, மீண்டும் உருட்டவும். இதை சூடான எண்ணெயில் பொரித்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும். மொறு மொறு பிரெட் போண்டா ரெடி.
4. பிரெட் பணியாரம்
தேவையான பொருட்கள்:
வெங்காயம், கேரட் – தலா 2, சால்ட் பிரெட் துண்டுகள் – 6, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது – தலா ஒரு டீஸ்பூன்,
தயிர் – ஒரு கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இதனுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்க்கவும். கேரட், வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். மொறு மொறு பிரெட் பணியாரம் தயார். தேங்காய்ப்பால், நாட்டு சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம்.
5. பிரெட் ஆனியன் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
பிரெட் - 10
நீளமாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.
பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக்கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சுவையான பிரெட் ஆனியன் பொடிமாஸ் ரெடி.
குறைந்த செலவில், அதிக நேரத்தைச் செலவிடாமல் மாலை நேர சிற்றுண்டிகளை உணவகத் தரத்தில் செய்து, விருந்தினர்களுக்கும் குடும்பத்தினருக்கும் உடனடியாகப் பரிமாறக்கூடிய சமையல் தேர்ச்சியைப் பெறலாம்.