
எத்தனை ஆங்கில மருந்துகள் இருந்தாலும் பக்க விளைவுகள் அற்ற நம்மூர் மூலிகைகளுக்கு நிகர் வேறில்லை. மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கும் கீரைகளில் கிடைக்கும் மருத்துவ நலன்கள் ஏராளம். இதோ இந்த குளிருக்கு ஏற்ற வகையில் உடல் நலத்தை காக்கும் வகையில் முடக்கத்தான் கீரை ரசமும், குப்பைமேனி சூப், பொதினா சூப்பும் செய்து அருந்தலாம் வாங்க…
முடக்கத்தான் கீரை ரசம்
தேவை;
முடக்கத்தான் கீரை - 2 கப்
புளி- தேவையான அளவு
தக்காளி -2
பூண்டு - 6
மிளகு, சீரகத்தூள் - தலா 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கடுகு , உளுத்தம் பருப்பு , சீரகம், கடலைப்பருப்பு - தாளிக்க
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
செய்முறை;
புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். சுத்தம் செய்த முடக்கத்தான்கீரை இலைகளை முக்கால்வாசி எடுத்து தேவையான நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் நெய் விட்டுத் தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, உப்பு தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி மீதமுள்ள இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேவையான புளி கரைசல்விட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி எடுத்து வைத்த கீரைசாறுடன் மிளகு சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். முடக்கத்தான் கீரை கை கால், மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்தாகும்.
குப்பைமேனி சூப்
தேவை;
குப்பைமேனி கீரை - ஒரு சிறிய கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை ,கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 1 மிளகு சீரகத்தூள் - தலா 3 டீஸ்பூன் கான்பிளார் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை;
சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைக்கவும். ஒரு குக்கரில் கழுவிய பாசிப்பருப்புடன் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, நறுக்கிய குப்பைமேனி கீரை சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கி ஆறியதும் மசித்து வடிகட்டவும்.
இதனுடன் கரைத்து கார்ன்பிளவர் பொடித்த மிளகு சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு சூடாக பரிமாறவும். குப்பைமேனி சற்று கசப்புத்தன்மை என்றாலும் இது சருமப் பிரச்னைகளுக்கு நல்லது.
புதினா சூப்
தேவை;
புதினா - 1 சிறிய கப் தண்ணீர்
பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை கிராம்பு - தலா 2
ஏலக்காய் -1
மிளகு சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன் எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை;
எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைக்கவும். ஒரு குக்கரில் கழுவிய பாசிப்பருப்புடன் தட்டிய பட்டை கிராம்பு, ஏலக்காய் நறுக்கி கழுவிய புதினா இலைகள் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும் ஆறியதும் மூடியை திறந்து மத்தால் கடைந்து தேவையான எலுமிச்சைசாறு உப்பு மிளகு சீரகத்தூள் சேர்த்து அருந்தலாம்.