ஜீரணத்திற்கு உதவும் ‘தீபாவளி லேகியம்’ செய்யலாம் வாங்க!

Deepavali sweets
தீபாவளி லேகியம்
Published on

தீபாவளி சமயங்களில் எல்லா வீடுகளிலும் பாரம்பரியமாக செய்யப்படும் ஆயுர்வேத மருந்துதான் தீபாவளி லேகியம். இதை சாப்பிடுவதால் வயிற்று பிரச்னை, அஜீரணம், நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். தீபாவளி காலநிலை மாற்றம் ஏற்படும் சமயம் வரக்கூடிய பண்டிகையாகும். அதுமட்டுமல்லாமல் தீபாவளி சமயத்தில் அதிகமாக இனிப்பு, காரம் உண்பதால் வயிறு சம்மந்தமான உபாதைகள் வரலாம். இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வர தீபாவளி லேகியம் கைவசம் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தப் பதிவில் தீபாவளி லேகியத்தை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தீபாவளி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:

தனியா-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

சோம்பு-1/4 தேக்கரண்டி.

கிராம்பு-1

பட்டை-1 துண்டு.

ஏலக்காய்-1

ஓமம்-1/2 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

இஞ்சி பொடி-1 தேக்கரண்டி.

வெல்லம்-1/4 கப்.

தண்ணீர்-1/4 கப்.

நெய்-1 தேக்கரண்டி.

நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி.

தீபாவளி லேகியம் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு ஃபேனை எடுத்துக்கொண்டு அதில் 1 தேக்கரண்டி தனியா, 1 தேக்கரண்டி மிளகு, ¼ தேக்கரண்டி சோம்பு, 1 கிராம்பு, ½ தேக்கரண்டி ஓமம் ஆகியவற்றை 2 நிமிடம் நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.

½ தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி இஞ்சி பொடி, பட்டை 1 துண்டு, ஏலக்காய் 1 சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக  அரைத்துக் கொள்ளவும். அப்போதுதான் கட்டி விழாமல் இருக்கும்.

இப்போது ஃபேனில் வெல்லம் ¼ கப் சேர்த்து அத்துடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரையும் வரை கலக்கிவிடவும். வெல்லம் கரைந்து கொதி வந்ததும் அதை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஃபேனை வைத்து அதில் வெல்ல பாகை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பாகு கொதித்து ½ கம்பி பதத்திற்கு வரும். வெல்ல பாகை தொட்டுப் பார்த்தால் பிசுபிசுப்பாக இருக்கும். அந்த சமயத்தில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதனுடன் சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை அறிந்துக் கொள்வோம்!
Deepavali sweets

இப்போது இதை நன்றாக கிளறிவிட்டுக் கொண்டேயிருக்கவும். நன்றாக கட்டியாகி தேன் பதத்திற்கு வரும். அந்த சமயம் 1 தேக்கரண்டி நெய் விட்டு கிளறவும். நன்றாக கிளறிக்கொண்டேயிருக்கும் போது கட்டியாகி வரும் அப்போது 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்விட்டு கிண்டிக் கொண்டேயிருந்தால் திரண்டு வரும் உடனே அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

இதை எந்த பாத்திரத்தில் சேமித்து வைக்கப் போகிறீர்களோ அதில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் தீபாவளி லேகியம் தயார். தீபாவளி அன்று காலையில் நன்றாக எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வெறும் வயிற்றில் இந்த தீபாவளி லேகியத்தை ஒரு உருண்டை சாப்பிட்டு விட்டு பிறகு எந்த இனிப்பு, காரம் வேண்டுமானாலும் சாப்பிடலாம். வயிறு பிரச்னை, அஜீரணக் கோளாறு எதுவுமே வராது. இந்த தீபாவளிக்கு இந்த லேகியத்தை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com