பரபரப்பான இந்தக் காலகட்டத்தில் பலருக்கும் உணவை பொறுமையாக மென்று சாப்பிடுவது என்பது அரிதான காரியமாகி விட்டது. உணவை பொறுமையாக மென்று கூழாக்கி சாப்பிடுவதனால் உடலுக்கு நிறைய ஆரோக்கியப் பலன்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. எவ்வளவு மெதுவாக உணவை மென்று சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு எவ்வளவு உணவை எடுத்துக் கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க முடியும். அதனால், அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை குறைத்துக் கொள்ள முடியும்.
2. நம்முடைய உமிழ்நீரில் செரிமான நொதிகள் இருப்பதனால், உணவுகளை மென்று சாப்பிடுவதனால் சிறிதாக உடைக்க உதவுகிறது. இதனால், உணவு செரிமானம் ஆவது சுலபமாக்கப்படுகிறது.
3. நன்றாக உணவை மென்று சாப்பிடுவது பற்கள் மற்றும் வாய்ப்பகுதியின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். உணவை மென்று சாப்பிடும்போது பற்கள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படுவதால் ஆரோக்கியம் பெறுகிறது. உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் வாயில் சுரக்கும் உமிழ்நீர், பாக்டீரியா உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதால் பல் சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படாது. உணவை கவனமாக எடுத்துக் கொள்வதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
4. சரியாகக் கூழாக்கப்படாமல் வயிற்றிலிருந்து சிறு குடலுக்கு செல்லும் உணவுகள் பாக்டீரியாவின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிடும். இதனால், வாயு பிரச்னை, வீக்கம், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, உணவை 32 முறை மென்று கூழாக்கி சாப்பிடுவது அவசியமென்று கூறுகிறார்கள்.
உணவை சரியாக மென்று சாப்பிடவில்லை என்றால் நெஞ்செரிச்சல், வயிறு சம்பந்தமான பிரச்னை, உணவிலிருந்து வரும் ஊட்டச்சத்துக்களை சிறு குடல் உறிஞ்சாமல் போதல், தேவையை விட அதிகமாக உணவை எடுத்துக் கொள்ளுதல், உணவின் சுவையை ரசித்து சாப்பிடாமல் போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
எனவே, உணவை 20 முதல் 30 முறை நன்றாக மென்று சாப்பிட பழகவும். இதற்காக ஒவ்வொரு முறையும் எத்தனை முறை மென்றோம் என்று எண்ணிக் கொண்டிருக்காமல், உணவு நன்றாக கூழாகும் வரை அசைபோடுவது சிறந்தது. டீ.வி, போன் போன்றவற்றை பார்த்துக்கொண்டே அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவற்றையெல்லாம் பின்பற்றினால் செரிமான பிரச்னை ஏற்படுவதிலிருந்து விடுபடலாம். முயற்சித்துதான் பாருங்களேன்.