நிலக்கடலை சேவு மற்றும் சேமியா அடை செய்யலாம் வாங்க!
நிலக்கடலையில் புரதம், கொழுப்பு மற்றும் ஊட்டச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது உடல் எடை குறைக்க உதவுகிறது. கடலையில் இயற்கையாகவே உள்ள ஃபேட்டி ஆசிட்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்கிறது. இத்தகைய நன்மைகளை கொண்ட கடலையை வைத்து ஒரு சூப்பர் டிஷ் செய்யலாம் வாங்க.
கடலை சேவு செய்ய தேவையான பொருட்கள்:
நிலக்கடலை-1கப்.
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
அரிசி மாவு-1கப்.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
கருவேப்பிலை, கொத்தமல்லி- தேவையான அளவு.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
கடலை சேவு செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு ஃபேனில் 1 கப் நிலக்கடலையை சேர்த்து கொண்டு அத்துடன் 1 வெங்காயம், 2 பச்சை மிளகாய், தண்ணீர் 1கப் சேர்த்து மூடி நன்றாக வேக விடவும். நிலக்கடலை நன்றாக வெந்த பிறகு அதை வடித்து எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்டாக அரைக்கவும்.
இப்போது இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அத்துடன் அரிசி மாவு 1 கப், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கிண்டிவிடவும். இத்தோடு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, 1 தேக்கரண்டி ஜீரகம் சேர்த்து நன்றாக கிண்டி விடவும்.
இப்போது பால் கவர் இருந்தால் அதை கோன் வடிவத்தில் செய்து எடுத்து கொண்டு அதனுள் செய்து வைத்திருக்கும் மாவு போட்டு கவரின் முனையை வெட்டி விட்டு சிறு சிறு துண்டுகளாக மாவு வருவதை சூடான எண்ணெய்யில் போட்டு நன்றாக பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்கவும். பார்பதற்கு காரசேவு மாதிரி இருக்கும். சுவை வேற லெவலில் இருக்கும். நீங்களும் வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.
சேமியா அடை செய்ய தேவையான பொருட்கள்:
சேமியா-1/2 கப்.
ரவை-1/2கப்.
தயிர்-1/4கப்.
கேரட்-1
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-1
இஞ்சி- சிறுதுண்டு.
கொத்தமல்லி- சிறிதளவு.
சீரகம்-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
சேமியா அடை செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு ஃபேனில் சேமியா ½ கப், ரவா ½ கப் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும். இப்போது அதை ஒரு பவுலில் மாற்றி அத்துடன் தயிர் ¼ கப், தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைத்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
இப்போது சிறிதாக நறுக்கிய கேரட் 1, பச்சை மிளகாய் 1, வெங்காயம் 1, சிறிதாக நறுக்கிய இஞ்சி சிறு துண்டு, கொத்தமல்லி சிறிது, சீரகம் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்து அடுப்பில் ஒரு ஃபேனை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி மாவை சிறிது சிறிதாக தட்டி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சேமியா அடை தயார். நீங்களும் வீட்டிலே ஒருமுறை முயற்சித்து பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.