
பருத்திப்பால்:
பருத்திக்கொட்டை ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
வெல்லம் தேவையானது
சுக்கு தூள் 1/2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
பருத்தி கொட்டைகளை நன்கு கழுவி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். இரவே ஊறவைத்து விட்டால் காலையில் செய்ய சுலபமாக இருக்கும். ஊறிய பருத்திக் கொட்டைகளை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும். இரண்டு முறை அரைத்து வடிகட்டி பால் எடுத்து வைக்கவும்.
துருவிய தேங்காயை சிறிது வெதுவெதுப்பான நீர் விட்டு அரைத்து கெட்டியான தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். பருத்திப்பாலை அரிசி மாவுடன் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து ஒரு கொதி வந்ததும் வடிகட்டி பருத்தி பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
ஏலக்காய்த்தூள், சுக்கு தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கொதித்ததும் எடுத்து வைத்த தேங்காய் பால் கலந்து கொதி வருவதற்கு முன் எடுத்து விடவும். தேங்காய்ப்பால் விட்டதும் கொதிக்க விட வேண்டாம். பரிமாறும் பொழுது பருத்தி பாலை விட்டு மேலாக சிறிது தேங்காய் துருவல் சேர்த்து பருக உடலுக்கு மிகுந்த பலம் தரும் பருத்தி பால் தயார்.
தினை மாவு புட்டு:
தினை ஒரு கப்
வெல்லம் அரை கப்
ஏலக்காய் பொடி அரை ஸ்பூன்
சுக்கு பொடி அரை ஸ்பூன்
தேன் 2 ஸ்பூன்
நெய் நான்கு ஸ்பூன்
முந்திரிப் பருப்பு 10
தினை மாவு மாவாகவே கடையில் கிடைக்கிறது. வீட்டில் செய்ய விரும்பினால் தினையை வாங்கி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து பருத்தித் துணியை விரித்து அதில் போட்டு உலர விடவும். தினையில் உள்ள தண்ணீர் வடிந்து லேசாக உலர்ந்ததும் வாணலியை அடுப்பில் வைத்து தினையைப் போட்டு நன்கு வறுக்கவும். தினையில் உள்ள ஈரப்பதம் போன பிறகு லேசாக வெடிக்க ஆரம்பிக்கும். அப்பொழுது இதனை ஒரு தட்டில் போட்டு ஆற விடவும். சூடு ஆறியதும் நைசாக பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
பொடித்த தினை மாவுடன் சுக்கு, ஏலக்காய்பொடி கலந்து விடவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர்விட்டு கரைந்ததும் வடிகட்டி கொதிக்க விட்டு பாகாக ஆனதும் தினை மாவில் கொட்டிக் கிளறவும். சூடு ஆறியதும் கையால் உதிர்க்க பொலபொலவென புட்டுபோல் உதிர்ந்து விடும்.
அதில் சிறிதளவு தேன் கலந்து முருகனுக்கு நைவேத்தியம் செய்யலாம். விருப்பப்பட்டால் நெய்யில் முந்திரிப் பருப்பை பொடித்துப் போட்டு பொரிய விட்டு மாவுடன் கலந்து கொள்ளலாம். சத்தான சுவையான தினைமாவு புட்டு தயார்.