
வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் ஐந்தே நிமிடத்தில் இந்த சுவையான கிரேவியை செய்து விடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.
ஐந்து நிமிட கிரேவி:
தனியா 2 ஸ்பூன்
பூண்டு 6-8 பற்கள்
வெங்காயம் 1
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
தயிர் 1 கப் (கடைந்தது)
வெல்லம் சிறிது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
தனியா விதைகளை வாணலியில் சூடுசெய்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பூண்டை நன்கு தட்டி வைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய்விட்டு அரைத்து வைத்துள்ள தனியா, சீரகம் சேர்த்து ஜீரகம் பொரிந்ததும் நசுக்கி வைத்துள்ள பூண்டையும் சேர்க்கவும். வெங்காயம் இருந்தால் அதனையும் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
பூண்டின் பச்சை வாசனை போனதும் மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். இரண்டு நிமிடம் கொதித்ததும் அதிகம் புளிப்பில்லாத கெட்டி தயிர் கடைந்தது ஒரு கப் விட்டு தேவையான உப்பு சேர்த்து, வெல்லத்துண்டு ஒன்றையும் போட்டு கொதித்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். மிகவும் ருசியான சப்பாத்தி, பூரி, சாதத்திற்கு தொட்டுக்க அருமையான கிரேவி தயார்.
பயறு கிரேவி:
பச்சைப்பயறு ஒரு கப்
வெங்காயம் 2
தக்காளி 1
பூண்டு இஞ்சி விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
தனியாத் தூள் 1 ஸ்பூன்
பிரிஞ்சி இலை 2
காரப்பொடி 1/2 ஸ்பூன்
எண்ணெய் சிறிது
கொத்தமல்லி சிறிது
பச்சை பயறை கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, சீரகத்தை போட்டு சீரகம் பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் போட்டு கலந்து பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்து மசிந்ததும் ஊறவைத்த பச்சை பயனை சேர்த்து தேவையான நீர் விட்டு குக்கரில் போட்டு 4 விசில் வரும்வரை வேக விட்டு எடுக்கவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியைத் தூவி பரிமாற மிகவும் ருசியான பச்சை பயறு கிரேவி தயார்.