
கீரைகள் அதிக சத்து நிறைந்தவை என்பதை நமக்கு தெரியும். அதிலும் தற்போது பெருகிவிட்ட மூட்டு வலிக்கு முடக்கத்தான் கீரையும் சருமம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு குப்பைமேனியும், சளிக்கு தூதுவளையும் பெரும்பாலான மக்கள் உபயோகித்து வருகிறார்கள். இங்கு முடக்கத்தான் மற்றும் தூதுவளையில் ரசமும் குப்பைமேனியில் சூப்பும் எப்படி வைப்பது என்பதை பார்ப்போம்.
முடக்கத்தான் ரசம்
தேவை;
முடக்கத்தான் கீரை இலைகள் - 2 கப்
புளி - சிறு அளவு
பழுத்த தக்காளி - 2
பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - தலா அரை டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு ,சீரகம்,
கடலைப்பருப்பு ,பெருங்காயம் - தலா கால்டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
நெய் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
செய்முறை;
புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். இரண்டு கப் முடக்கத்தான் கீரை இலைகளை தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும். வானலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு உள்ளிட்டவைகளை தாளிக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய அல்லது மிக்சியில் அடித்த தக்காளி, பூண்டு விழுது இன்னும் மீதம் உள்ள ஒரு கைப்பிடி இலையை சேர்த்து நன்கு வதக்கவும். கூடவே உப்பு சேர்த்துக் கொள்ளவும் . பிறகு அதில் புளி கரைசல் விட்டு ஒரு கொதி வந்ததும் மிளகு சீரகத்தூள் வடிகட்டிய கீரை சாறு சேர்த்து மேலும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இந்த ரசம் கை கால் மூட்டு வலியை நீக்க உதவும்.
தூதுவளை ரசம்
தேவை:
தூதுவளை இலைகள் - 1 கைப்பிடி வேகவைத்த பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு தண்ணீர் - 1 கப்
புளி கரைசல் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1/4டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க
வரமிளகாய் - 2
மிளகு, சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
நல்லெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை;
தூதுவளையை சுத்தம் செய்து இரண்டு பகுதிகளாக பிரிக்கவும். புளியை கரைத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், தட்டிய பூண்டு சேர்த்துக்கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், ஒரு பகுதி தூதுவளை இலைகள் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் புளி கரைசல் ஊற்றி ஒரு கொதி விடவும். புளி வாசம் போய் கொதித்ததும் மிளகு, சீரகத்தூள், தேவையான பருப்பு தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதித்து வரும்போது இறக்கி மேலே கொத்தமல்லி தூவி சூடாக அருந்தலாம். இந்த தூதுவளை ரசம் சளி காய்ச்சல் தலைவலி போன்றவற்றுக்கு உடனடி நிவாரணம் தரும் அருமருந்தாகும்.
குப்பைமேனி இலை சூப்
தேவையானவை;
குப்பைமேனி கீரை - ஒரு கைப்பிடி அளவு பட்டை லவங்கம் - தலா2, பிரிஞ்சி இலை- 1
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
கான்பிளார் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு தேவைக்கு
செய்முறை;
சோள மாவுடன் சிறிதளவு நீர்விட்டு பேஸ்ட்போல கரைக்கவும். ஒரு குக்கரில் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஊறவைத்த பாசிப்பருப்பு, குப்பைமேனிக்கீரை, உப்பு சிறிது தேவையான தண்ணீர் சேர்த்து மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். கீரை கடைசல் ஆறியதும் மசித்து வடிகட்டவும் இதனுடன் கான்பிளார் கரைசல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்து சூடாக பரிமாறவும் .
இதில் சற்று கசப்பு தன்மை இருக்கும் என்பதால் மேலும் புளிப்பு வேண்டும் என்று விரும்பினால் மட்டும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். சருமம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் தரும் சூப் இது.