
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அது உணவு விநியோகத்திலும், வீடுகளிலும் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் பெட்டிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் பலரும், இந்த கருப்பு பிளாஸ்டிக் பெட்டிகளை சூடுபடுத்தும்போது, அதில் உள்ள நச்சு இரசாயனங்கள் உணவில் கலந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
கருப்பு பிளாஸ்டிக் நேரடியாக புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லையென்றாலும், அதில் பயன்படுத்தப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேர்க்கப்படும் ரசாயனங்கள் ஆபத்தானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சந்தையில் கிடைக்கும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்களில் 85% நுகர்வோர் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சாதாரண உணவுத் தட்டுகள், பார்சல் பெட்டிகள், மற்றும் உணவுப் பொருட்களை சேமிக்கும் பாத்திரங்கள் என அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் பழைய எலக்ட்ரானிக் கழிவுகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் தீப்பிடிக்காமல் இருக்க decaBDE போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் வெப்பம் அல்லது அமிலத்தன்மைக்கு ஆளாகும்போது உணவில் கலக்க வாய்ப்புகள் அதிகம்.
"கெமிக்கல்ஸ்பியர்" என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியான ஒரு ஆய்வு முடிவுகள் கருப்பு பிளாஸ்டிக் பொருட்களின் ஆபத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. அந்த ஆய்வில், 200க்கும் மேற்பட்ட கருப்பு பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்ததில், 85% பொருட்களில் நச்சுத்தன்மை கொண்ட தீத்தடுப்பு ரசாயனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
decaBDE போன்ற ரசாயனங்கள் புற்றுநோயை ஊக்குவிக்கும் காரணிகளாகவும், ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து புற்றுநோய்க்கு வழிவகுக்கும் அபாயமும் இருப்பதாக எச்சரிக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, கருப்பு பிளாஸ்டிக்கில் பிஸ்பெனால் A (BPA) மற்றும் பித்தலேட்டுகள் போன்ற இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ரசாயனங்களும் கலந்திருக்க வாய்ப்புள்ளது.
கருப்பு பிளாஸ்டிக்கிற்கு கருப்பு நிறம் கொடுப்பதற்காக சேர்க்கப்படும் கார்பன் பிளாக் நிறமி, பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHகள்) போன்ற புற்றுநோய் பண்புகளைக் கொண்ட பல ஆபத்தான சேர்மங்களை உள்ளடக்கியுள்ளது. இதனாலேயே சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) கார்பன் கருப்பை "மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும்" பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
புற்றுநோயியல் நிபுணர்கள், கருப்பு பிளாஸ்டிக் உணவு கொள்கலன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கின்றனர். புற்றுநோய் அபாயம் அதிகரிப்பது மட்டுமின்றி, ஹார்மோன் சமநிலையின்மை, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நரம்பியல் பாதிப்புகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, மற்றும் நுண் பிளாஸ்டிக் மாசுபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உள்ளது.
கருப்பு பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வது மிகவும் கடினம் என்பதால், அவை பெரும்பாலும் குப்பை கிடங்குகளிலோ அல்லது எரிக்கப்படும் இடங்களிலோ சென்று சேர்கின்றன. அங்கு இவை எரிக்கப்படும்போது டையாக்சின்கள் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து புற்றுநோயை உண்டாக்குகின்றன.
எனவே, உணவுப் பொருட்களை சேமிக்கவும், சூடுபடுத்தவும் கருப்பு பிளாஸ்டிக் பெட்டிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.