
நாம் உண்ணும் உணவில் உப்பு, காரம், இனிப்பு, புளிப்பு கசப்பு துவர்ப்பு போன்ற ஆறு சுவைகளும் அடங்கியிருப்பது ஆரோக்கியம் தரும் என்றனர் நம் முன்னோர்கள்.
கசப்பு சுவைகொண்ட சுண்டைக்காய், பாகற்காய் போன்ற காய்களிலும் மற்ற காய்களில் இருப்பதைப் போலவே உடலுக்கு நன்மை தரக்கூடிய குணங்கள் உண்டு. பாகற்க்காயில் செய்த உணவுகளை உட்கொள்ளும்போது நம் இரைப்பையில்
இருக்கும் தீமை தரும் பூச்சிகள் அழியும்; நன்கு பசி எடுக்கும். பித்தம் நீங்கும். தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இந்த பாகற்காயைக் கொண்டு ஆந்திர மாநிலத்தினர் சமைக்கும் சுவையான குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
பாகற்காய் குழம்பு
தேவையான பொருள்கள்:
1. வேர்க்கடலைப் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் 2. எள் 2 டேபிள் ஸ்பூன் 3.கடலைப் பருப்பு 1 டீஸ்பூன் 4.உளுத்தம் பருப்பு 1
டீஸ்பூன் 5.சீரகம் 1 டீஸ்பூன் 6.கொத்தமல்லி விதை 1 டீஸ்பூன் 7.வெந்தயம் ¼ டீஸ்பூன் 8.காய்ந்த சிவப்பு மிளகாய் 4.
9.பெரிய சைஸ் பாகற்காய் 1
10.எண்ணெய் தேவையான அளவு
11.கடுகு 1 டீஸ்பூன்
12.உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
13.கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
14.சீரகம் ½ டீஸ்பூன்
15.பெருங்காயம் 1 சிட்டிகை
16.காய்ந்த சிவப்பு மிளகாய் 1
17.நறுக்கிய வெங்காயம் 1
18.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
19.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
20.உப்பு தேவையான அளவு
21.புளி கரைத்த நீர் 1 கப்
22.வெல்லம் 1டேபிள் ஸ்பூன்
23.கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
செய்முறை:
மேலே கூறிய பொருட்களில் ஒன்று முதல் எட்டு வரை உள்ளவற்றை ஒரு கடாயில் போட்டு சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்.
பாகற்காயை வட்ட வடிவ ஸ்லைஸ்ஸாக நறுக்கி விதைகளை நீக்கி ஒரு டீஸ்பூன் உப்பு கலந்த நீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் ஊற விடவும். பின் காயை நன்கு பிழிந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பிறகு ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், ஒரு சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். அவை பொன்னிறமானதும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் பொரித்த பாகற்காய் துண்டுகள், உப்புத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிடவும். பின் புளிக்கரைசல், வெல்லம் மற்றும் அரைத்து வைத்த பொடி ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் ஒன்றுசேர கலந்துவிடவும். பிறகு கொதி வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும். கொத்தமல்லி இலைகள் சேர்த்து அலங்கரிக்கவும்.
சுவையான பாகற்காய் குழம்பு சாதத்தில் சேர்த்து பிசைந்துண்ண ரெடி!