
மாங்காய் ஊறுகாயில், மாங்காய் துண்டுகள் தீர்ந்து போய் மசாலா மட்டும் இருந்தால், அதில் தேவையான அளவு இஞ்சியும், பச்சை மிளகாயும் நறுக்கிச் சேர்த்து, மூன்று, நாலு நாட்கள் வெயிலில் வைத்துவிடுங்கள். சுவையான ஊறுகாய் தயாராகிவிடும்.
ஆவக்காய் ஊறுகாய் போடும்முன் நறுக்கி வைத்த மாங்காய்களை ஒருமணி நேரம் வெயிலில் காயவைத்து ஊறுகாய் போட்டால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து பிசிறி வைத்தால் தயிர் சாதம், சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ள சுவையான
ஊறுகாய் சில நொடிகளில் தயார். விருப்பப்பட்டால் காரப்பொடி, அல்லது மிளகுப்பொடியும் தூவிக் கொள்ளலாம்.
சாறு பிழிந்த எலுமிச்சம் பழத்தோல்களை வீணாக்காமல், ஆவியில் வேகவைத்து எடுத்து, அதில் கடுகு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு சேர்த்து தாளித்தால் சுவையான ஊறுகாய் ரெடி.
எந்த ஊறுகாய் செய்தாலும் அதில் கொஞ்சம் கடுகு எண்ணெய் ஊற்றி வைத்தால் சீக்கிரமாக கெட்டுப்போகாது.
ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் போடும்போது அதில் பச்சை நல்லெண்ணெய் மேலே நிற்குமாறு ஊற்றினால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
ஊறுகாயிலுள்ள காய்கள் தீர்ந்து வெறும் விழுது மட்டும் இருக்கிறதா? ஒரு பாத்திரத்தில் நாலு சின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிப்போட்டு, அதில் இரண்டு மூன்று ஸ்பூன் ஊறுகாய் விழுதைக் கலந்துவிடுங்கள். இது தயிர் சாதத்துக்கும், ஃப்ரைடு ரைஸ் அயிட்டத்துக்கும் சூப்பர் சைடு டிஷ்ஷாக இருக்கும்.
மொத்த விழுதிலும் வெங்காயத்தைச் சேர்க்காமல் அவ்வப்போது தேவையான அளவு மட்டும் தயாரித்துக் கொண்டால்தான் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
ஆவக்காய் ஊறுகாய் போடும்போது பெரிய துண்டுகளாகப் போடாமல், சிறு சிறு துண்டுகளாகப் போட்டால் வேஸ்ட்டாகாமல் இருக்கும்.
எலுமிச்சைப் பழங்களை நான்காகக் கீறி, கல் உப்பு வைத்து அடைத்து பீங்கான் ஜாடியில் வைத்துவிட்டால் உப்புக் கசிந்து நீண்ட நாள் கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது எண்ணெய், காரம் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
ஊறுகாய் போடும்போது வினீகர் ஊற்றிவைத்து, ஊறுகாய் ஜாடியை நன்றாக குலுக்கி வைக்கவேண்டும். மேலும் காய்ச்சிய எண்ணெயை ஆறவிட்டு ஊறுகாய் ஜாடியில் ஊற்றினால் ஊறுகாய் பூசணம் பிடிக்காது.
ஊறுகாய் போட்டபின், ஊறுகாய் ஜாடியின் வாயை மூடியால் மூடிய பின், அதன் மேல் ஒரு பாலிதீன் கவர் வைத்துக் கழுத்துப் பகுதியை ரப்பர் பாண்டால் இறுக்கிக்கட்டி விடலாம். ஊறுகாய்க்கு அருமையான பாதுகாப்பு கிடைக்கும்.
ஊறுகாய் பாட்டில்களில் சில சமயம் பூஞ்சைக் காளான் படிந்திருக்கும். இதை அகற்றிவிட்டு சாப்பிடுபவர்கள் நிறையப் பேர் உண்டு. இது கொடிய நச்சுத்தன்மை உடையது. எனவே பூஞ்சைக் காளான் சுற்றிய எதையும் சாப்பிடக்கூடாது.