
இந்தியாவில் 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். வடமாநிலங்களில் துர்கா தேவியை வழிபடுவார்கள். தமிழகத்தில் இதுவே நவராத்திரி பண்டிகை கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். இதன் கடைசி நாட்களில் தான் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி, சரஸ்வதி பூஜை அக்டோபர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜை நாளில் வீட்டில் உள்ள ஆயுதங்கள், நம் தொழிலில் உபயோகப்படுத்தும் ஆயுதங்களை வைத்து வழிபடுவார்கள். சரஸ்வதி பூஜை அன்று படிப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களான புத்தங்களை வைத்து வழிபடுவார்கள். இந்த அனைத்து வழிபாட்டிலும் பொரி, பழங்கள் முக்கிய இடம்பெறும். கட்டாயம் அனைவரது வீடுகளிலும் கிலோ கணக்கில் பொரி, பழங்கள், சுண்டல் வைத்தும் கடவுளுக்கு படைத்து வழிபடுவார்கள்.
இங்கு படைக்கப்படும் பொரி நாள்கணக்கில் வீண் தான். அன்று ஒரு நாள் பொரி சாப்பிடுவார்கள். சில வீடுகளில் அடுத்து 3 நாள் வரை கூட சாப்பிடுவார்கள். ஆனால் இன்னும் மிச்சமாகும் பொரி நாள்கணக்கில் ஓரமாக தான் இருக்கும். அது நாட்கள் செல்ல செல்ல நமத்து போய்விடும். இப்படி இருக்கையில் இந்த பொரியை என்ன செய்வதென்று கவலை கொள்ளாமல் வீட்டிலேயே ஈஸியாக கார கொழுக்கட்டை செய்து சாப்பிடுங்கள். தீபாவளி பண்டிகைக்கு கூட இந்த கொழுக்கட்டை ரெசிபி செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
பொரி - 2 கப்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
துருவிய இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிதளவு
இட்லி பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பொரியை தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் ரவை, அரிசி மாவு, உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து பிசைந்துக்கொள்ளுங்கள்.
பின் அதை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அடுத்ததாக அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளுங்கள்.
பின் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
அதை இட்லி சட்டியில் 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
பின் வேக வைத்த பொரி உருண்டைகளை சேர்த்து பிரட்டுங்கள்.
பின் அதில் இட்லி பொடி, கொஞ்சம் மஞ்சள் தூள் தேவைப்பட்டால் மிளகாய் தூள் தூவி பிரட்டி எடுங்கள். அவ்வளவுதான் சுவையான பொரியில் கார கொழுக்கட்டை தயார்.
இதை இரவு உணவு அல்லது காலை உணவுக்கு சாப்பிடலாம். மேலும் ஸ்னாக்ஸாக கூட ஹெல்தியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். நிச்சயம் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.