
'மக்கானா' என்று பொதுவாக அழைக்கப்படும் தாமரை விதைகள், சமீபகாலமாக ஆரோக்கிய உணவுகள் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. வட இந்திய மாநிலங்களில் பிரபலமான ஒரு சிற்றுண்டிப் பொருளாக இருந்தாலும், அதன் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக தற்போது உலகம் முழுவதும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறைந்த கலோரிகளுடனும், அதிக ஊட்டச்சத்துகளும் நிறைந்த இந்த 'சூப்பர்ஃபுட்'டின் நன்மைகளையும், பலரும் அறியாத சில சுவையான ரெசிபியையும் இங்கு காண்போம்.
மக்கானாவின் நன்மைகள்
1. குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து:
மக்கானாவில் கலோரிகள் மிகக் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கலைத் தடுக்கிறது.
அதிக நார்ச்சத்து காரணமாக நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும், இதனால் தேவையற்ற ஸ்நாக்ஸ், பாஸ்ட் புட் சாப்பிடுவதை குறைக்கலாம்.
2. புரதச்சத்து நிறைந்தது:
மக்கானா புரதச்சத்து நிறைந்த ஒரு சிற்றுண்டியாகும். புரதம் தசை வளர்ச்சிக்கும், உடல் ஆற்றலுக்கும் அவசியமானது. சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த புரத சக்தியாகும்.
3. இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது:
மக்கானாவின் கிளைசெமிக் இண்டெக்ஸ் (Glycemic Index - உணவு உண்ட பின் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் வேகம் குறைவாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காமல் சீராக வைத்திருக்க உதவுகிறது.
4. இதய ஆரோக்கியம்
இதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. குறைந்த சோடியம் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன.
5. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது:
மக்கானாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பைக் குறைத்து, செல் பாதிப்பை தடுக்கின்றன. இது வயதான தோற்றத்தைத் தள்ளிப்போட்டு, சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
6. கால்சியம் மற்றும் எலும்பு ஆரோக்கியம்:
எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான கால்சியம் மக்கானாவில் அதிக அளவில் உள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தடுக்க உதவும்.
மக்கானா டிக்கி / கட்லெட்
பொதுவாக, மக்கானாவை நெய்யில் வறுத்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து மசாலா வகையாகவோ அல்லது பாயாசம், கீர் போன்ற இனிப்புகளில் பயன்படுத்துவோம். ஆனால், இதை வைத்து ஒரு வித்தியாசமான மற்றும் சுவையான உணவை தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
வறுத்த மக்கானா: 1 கப் (கரகரப்பாகப் பொடித்தது)
வேகவைத்த உருளைக்கிழங்கு: 1 பெரியது (மசித்தது)
பச்சை மிளகாய்: 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி துருவியது: 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை: 2 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)
சாட் மசாலா: 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள்: 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா: 1/4 டீஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
பிரட்கிரும்ப்ஸ் / ரவை: 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்: தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பெரிய பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பொடித்த மக்கானா, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி இலை, சாட் மசாலா, சீரகத்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
2. இந்தக் கலவையை சிறிய டிக்கி அல்லது கட்லெட் வடிவத்தில் உருவாக்கவும்.
3. ஒவ்வொரு டிக்கியையும் பிரட்கிரம்ப்ஸ் அல்லது ரவையில் நன்கு புரட்டவும். இது மொறுமொறுப்பைக் கொடுக்கும்.
4. ஒரு தவா அல்லது கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, டிக்கிகளை மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை இருபுறமும் வறுக்கவும்.
5. புதினா சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வது அவசியம். அதற்கான ஒரு சிறந்த தேர்வாக மக்கானா இருக்கிறது. இனிமேல், அதிக எண்ணெய், கலோரிகள் நிறைந்த ஸ்நாக்ஸ்களுக்கு மாற்றாக மக்கானாவைத் தேர்ந்தெடுத்து, உங்கள் குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.