கோடைக்காலத்தை மகிழ்ச்சியாக கடப்பதற்காக தினமும் ஏதேதோ விஷயங்களை முயற்சித்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்வது, வீட்டில் ஏசி மாட்டுவது, ஜில் என்று ஜூஸ் குடிப்பது என்று உடலையும், மனதையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம். இன்றைக்கும் அப்படியொரு ஜூஸ் ரெசிபி பற்றித்தான் காண உள்ளோம். இந்த சம்மரில் எளிதாக கிடைக்கும் மாங்காய் மற்றும் இளநீரை வைத்து வீட்டிலேயே செய்ய கூடிய சுலபமான இரண்டு ஜூஸ் ரெசிபீஸ். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
செய்ய தேவையான பொருட்கள்:
சிறிதாக நறுக்கிய மாங்காய்-1
உப்பு- 1 சிட்டிகை.
சக்கரை-1 தேக்கரண்டி.
புதினா இலை-5
ஐஸ்கட்டி- தேவையான அளவு.
காய்ந்த மிளகாய்-5
வெல்லம்-1 துண்டு.
கல் உப்பு- சிறிதளவு.
தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு மாங்காய் எடுத்துக்கொண்டு அதன் தோலை சீவி விட்டு சின்னதாக வெட்டிக்கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சிட்டிகை உப்பு, 1 தேக்கரண்டி சர்க்கரை, புதினா இலை 5, ஐஸ்கட்டி தேவையான அளவு சேர்த்து, ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து மிக்ஸியில் 5 காய்ந்த மிளகாய், வெல்லக்கட்டி சிறிது, கல் உப்பு சிறிது சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இப்போது அரைத்த பொடியை ஒரு தட்டில் கொட்டி தம்ளரை எடுத்து அதிலே வைத்து வாய் பகுதியில் அரைத்த மிளகாய் ஒட்டுவது போல வைத்து எடுத்துக்கொள்ளவும்.
தம்ளரில் 4 புதினா இலையை போட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் மாங்காய் ஜூஸை ஊற்றி அத்துடன் 4 ஐஸ்கட்டியை சேர்த்து பரிமாறவும். இப்போது புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையான மாங்காய் ஜூஸ் தயார்.
சம்மர் ஸ்பெஷல் இளநீர் குலுக்கி:
இளநீர் குலுக்கி செய்ய தேவையான பொருட்கள்.
சப்ஜா விதை -1 தேக்கரண்டி.
இஞ்சி- சிறிதளவு.
எழுமிச்சை சாறு-1/2 மூடி.
வெல்லம்- 3 தேக்கரண்டி.
இளநீர்- 1 டம்ளர்.
இளநீர் வழுக்கை-5 துண்டுகள்.
ஐஸ்கட்டி- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் 1 துண்டு இஞ்சியை எடுத்து சிறிதாக வெட்டி மிக்ஸியில் போட்டு அத்துடன் 3 தேக்கரண்டி வெல்லம் சேர்த்து இளநீர் 1 டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது அத்துடன் ½ மூடி எழுமிச்சை சாறை சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் இளநீர் வழுக்கை 5 துண்டுகளை சேர்த்து அத்துடன் சிறிது இளநீர் சேர்த்து நன்றாக அரைத்து அதையும் முன்பே செய்து வைத்திருந்த கலவையோடு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு தம்ளரில் ஊற வைத்திருந்த சப்ஜா விதை 1 தேக்கரண்டி சேர்த்து அத்துடன் தேவையான அளவு ஐஸ் கட்டிகளையும் சேர்த்து அதில் அரைத்து வைத்திருக்கும் இளநீர் குலுக்கியை ஊற்றி பரிமாறவும். இப்போது சுவையான இளநீர் குலுக்கி தயார். நீங்களும் வீட்டில் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.