
ஊறுகாய் செய்யும்போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது. ஊறுகாயும் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியைவிட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
சேப்பங்கிழங்கை வேகவைத்து பிரிஜ்ஜில் அரை மணிநேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.
பூண்டின் தோலை சுலபமாக உரிக்க அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை ஆப் பண்ணிவிட்டு தேவையான பூண்டு பற்களை போட்டு கிளறி மூடி வைத்துவிடவும். 10 நிமிடம் ஆனதும் எடுத்து உரித்தால் சுலபமாக தோல் வந்துவிடும்.
ஃபிரிட்ஜை சுத்தப்படுத்த 1/2 தேக்கரண்டி பற்பசையை எடுத்து தண்ணீரில் கலக்கி மெல்லிய காட்டன் துணியால் துடைத்து பின்னர் வெறும் தண்ணீரில் துடைத்தால் பிரிஜ் பளிச்சென்று ஆகிவிடும்.
ரவா தோசை சுடும்போது மாவில் இரண்டு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நல்ல மொறுகலாக வரும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது இரண்டு மேஜைக்கரண்டி தயிரும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
தயிர் வடை செய்யும்போது வடையை பொரித்ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.
ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது, இரண்டு டீ ஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.
இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.
முள்ளங்கி சாம்பார் செய்யும்போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.
கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், பச்சரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.
வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.
உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.
பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேகவைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.
மோர் குழம்பு செய்து இறக்கும்போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.
கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்குத் தேவையானதை, முதல் நாள் ஊறப்போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேகவைத்தால் நன்கு வெந்துவிடும்.
தோசை மாவு அரைக்கும்போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.
காப்பி பில்டரில் அடிப்பாகத்தில் உள்ள துவாரங்கள் அடைத்துக் கொண்டால் காஸ் அடுப்பை ஆன் பண்ணி சிம்மில் வைத்து பில்டரை இடுக்கியால் பிடித்து பர்னருக்கு மேல் காட்டினால் அடைத்துக் கொண்டிருக்கும் தூள்கள் விழுந்துவிடும்.
மோர்க்குழம்பு செய்யும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி குழம்பில் சேர்த்தால் நல்ல வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.
வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.
இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை உளுந்து அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
துவரம்பருப்பை வேகவைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.
தர்பூசணி தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடனும் இருக்கும்.