இப்படி ஒரு முறை மசாலா பூண்டு தொக்கு செஞ்சு பாருங்க!
தமிழர்களின் உணவுகளில் பூண்டு இல்லாத உணவை நீங்கள் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு இது முக்கிய இடம் பிடிக்கும் ஒன்றாகும். பூண்டு பயன்படுத்தி செய்யப்படும் மசாலா தொக்கு இட்லி, தோசை சாதம் என எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் அதன் சுவை வேற லெவலில் இருக்கும். பூண்டின் காரம், மசாலாக்களின் வாசனை இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து முற்றிலும் வித்தியாசமான சுவை அனுபவத்தை இது நமக்குத் தரும். இன்று இந்தப் பதிவில் சுவையான பூண்டு தொக்கு வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பூண்டு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - சின்ன குழி கரண்டி அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் 100 கிராம் பூண்டை லேசாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மீதமுள்ள வைத்துள்ள பூண்டு சின்ன வெங்காயம் போட்டு வதக்கி தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கி தனியாக ஆற வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இப்போது வதக்கி வைத்துள்ள தக்காளி பூண்டு சின்ன வெங்காயம் வறுத்த தேங்காய் துருவல் இத்துடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
மீதம் இருக்கும் எண்ணையை கடாயில் ஊற்றி கடுகு போட்டு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், தட்டி வைத்த பூண்டு போட்டு கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும். பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்பு அதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறுதியாக அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.