
புதிதாக திருமணமானவர்களா? பலகாரங்கள் செய்து பழக்கம் இல்லையா கவலை வேண்டாம்! மிகவும் சுலபமான இனிப்பு மற்றும் கார வகைகளை செய்து வீட்டில் உள்ளவர்களையும், விருந்தினர்களையும் அசத்தலாம்.
சாக்லேட் சேமியா பர்ஃபி:
சாக்லேட் 100 கிராம்
சர்க்கரை 50 கிராம்
வறுத்த சேமியா 100 கிராம்
பால் 1/2 லிட்டர்
முந்திரி பருப்பு 15
ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
நெய் 1/4 கப்
சூடான பாலில் சாக்லேட்டை கரைக்கவும். சேமியாவை பாலில் வேக விடவும். நெய்யில் முந்திரிப்பருப்பு துண்டுகளை வறுத்தெடுக்கவும். நன்கு வெந்த சேமியாவுடன் சாக்லேட் கரைசலை சேர்த்து சர்க்கரை, நெய் ஆகியவற்றையும் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும். ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி பருப்பு துண்டுகளை சேர்த்துக் கிளறவும். வில்லைகள் போடும் பதம் வந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும். சிறிது ஆறியதும் விருப்பமான வடிவத்தில் வில்லைகள் போட மிகவும் ருசியான சாக்லேட் சேமியா பர்ஃபி தயார்.
அமிர்த கேக்:
பச்சரிசி மாவு 1கப்
தேங்காய் 1
சர்க்கரை 2 1/2கப்
நெய் 1/2 கப்
பால் 1 கப்
ஆரஞ்சு கலர் 2 சிமிட்டு (விருப்பப்பட்டால்)
பச்சரிசி மாவை நன்கு சலித்து எடுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சர்க்கரையை 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிட சர்க்கரை கரைந்து ஒத்தை கம்பி பாகு வரும் (5 நிமிடம் கொதிக்க வைத்தால் ஒத்தை கம்பி பதம் வரும்).
அடி கனமான வாணலியில் அரிசி மாவை 1/4 கப் தண்ணீர், ஆரஞ்சு கலர் மற்றும் பாலுடன் கரைத்து, தேங்காய், நெய் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும். இரண்டு நிமிடங்கள் கழித்து சர்க்கரைப் பாகை இதில் கொட்டிக்கிளறவும். ஓரங்களில் பூத்துக் கொண்டு வில்லைகள் போடத்தயாராகிவிடும் சமயம் நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் வில்லைகள் போடவும். பத்தே நிமிடத்தில் சுலபமான, சுவையான கேக் தயார். வாயில் போட்டவுடன் கரைந்துவிடும் சுவையான ரெசிபி இது.
வரகரிசி தேங்காய்ப்பால் முறுக்கு:
வரகரிசி மாவு 1 கப்
பயத்த மாவு 1/4 கப்
தேங்காய் 1
உப்பு தேவையானது
பொடித்த சர்க்கரை 1 ஸ்பூன்
வெண்ணெய் 1 ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
பயத்தம் பருப்பை வாணலியில் லேசாக வாசம் வரும் வரை வறுத்து நைசாக பொடித்துக்கொள்ளவும். தேங்காயை வெதுவெதுப்பான தண்ணீர்விட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
வரகரிசி மாவுடன் பயத்தம் பருப்புமாவு, வெண்ணெய், தேவையான உப்பு, சுவையைக் கூட்ட ஒரு ஸ்பூன் சர்க்கரைப் பொடியையும் சேர்த்துக் கலக்கவும். தேங்காய்ப்பாலை வெதுவெதுப்பாக சுட வைத்து மாவில் விட்டுக் கலந்து பிசையவும். முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, எண்ணெய் காய்ந்ததும் முறுக்குகளாக பிழிந்தெடுக்க மணமான, மிகுந்த சுவையுள்ள தேங்காய்ப்பால் முறுக்கு தயார்.