
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பத்துவா பரோட்டா தொட்டுக்க மேத்தி ஊறுகாய் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பத்துவா பரோட்டா
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு 1 கப்
நறுக்கிய பத்துவா (பருப்புக் கீரை) 1 கப்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
ஓமம் (Ajwain) 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
உப்பு, தண்ணீர், எண்ணெய் அல்லது பட்டர் தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகாய் தூள், உப்பு, ஓமம், பத்துவா கீரை, நெய் ஆகியவற்றை சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை மூடி போட்டு மூடி பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைத்துவிடவும்.
பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்திக் கல்லில் பரோட்டாக்களாக தேய்த்து எடுக்கவும். பின் தோசைக் கல்லை அடுப்பில் காய வைத்து எண்ணெய் அல்லது பட்டர் தடவி பரோட்டாக்களை சுட்டெடுக்கவும். சூடாக, ஊறுகாய், சட்னி, ரைத்தா அல்லது சப்ஜியுடன் பரிமாறவும். ப்ரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்துக்கள் அடங்கிய அருமையான உணவு பத்துவா பரோட்டா!
மேத்தி ஊறுகாய்
சிறிது கசப்பு சுவையுடன் ஸ்பைசியான மேத்தி ஊறுகாய் எப்படி செய்வதென இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம் 100 கிராம்
கடுகு எண்ணெய் 150 கிராம்
பெருஞ்சீரகம் 16 கிராம்
காஷ்மீரி சில்லி பவுடர் 22 கிராம்
உப்பு 23 கிராம்
மஞ்சள் தூள் 2 கிராம்
உலர்ந்த மாங்காய் பவுடர் 7 கிராம்
வெங்காய விதைகள் 2 கிராம்
உடைத்த கடுகு விதைகள் 20 கிராம்
செய்முறை:
வெந்தயத்தை இரவில் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். காலையில் தண்ணீரை வடித்து, உலர்த்தி எடுத்துக்கொள்ளவும். கடுகு எண்ணெய் தவிர்த்து மற்ற ஸ்பைஸஸ் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
ஒரு கடாயில் கடுகு எண்ணெய்யை ஊற்றி, புகை வரும் அளவுக்கு நன்கு சூடாக்கவும். பின் அடுப்பை அணைத்துவிடவும். இப்படி செய்வதால் கடுகின் கடுமையான வாசனை குறைந்து சுவை கூடும். எண்ணெய் சூடாக இருக்கும்போது அதில் ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் சேர்த்து, அது சிவந்ததும் வெந்தயத்தை சேர்க்கவும். கூடவே கலந்து வைத்த ஸ்பைஸஸ்களையும் சேர்த்து அனைத்தும் நன்கு ஒன்று சேர்ந்து வரும்படி கலந்து விடவும்.
பின் நன்கு ஆறியவுடன் கண்ணாடி ஜாரில் போட்டு மூடி நான்கு நாட்கள் விட்டு விடவும். பிறகு மேலே ஒரு அடுக்கு சூடான எண்ணெய் ஊற்றி, ஊறுகாயை உபயோகிக்க ஆரம்பிக்கவும். வீட்டுத் தயாரிப்பான இந்த ஊறுகாய் பருப்பு சாதம், பரோட்டா போன்ற எதனுடனும் சேர்த்து உண்ண ஏற்றது. இது ஜீரண சக்தியையும் அதிகரிக்க உதவும்.