
நாம் காலையில் சத்தான, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளும் போது அன்றைய தினம் முழுவதும் நாம் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க உதவும்.
நிறைய பேர் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். அது மிகவும் தவறு. நாம் உடலின் ஆற்றலுக்கு காலை உணவு மிகவும் அவசியம். எனவே காலையில் சத்தான உணவை எடுத்துகொள்ளும் போது அது உடலுக்கு ஆற்றலை தருகிறது.
ஆரோக்கியமான மற்றும் சுவையான தோசை செய்முறையைத் தேடுகிறீர்களா? இந்த கறிவேப்பிலை தோசையை செய்து பாருங்கள். இந்த தோசையில் ஊட்டச்சத்து மற்றும் ஒரு புதிய, மூலிகை சுவை நிரம்பியுள்ளது. இது பிஸியான நாட்களுக்கு ஏற்றது. இந்த தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 2 கப்
கறிவேப்பிலை - அரை கப்
கொத்தமல்லி தழை - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - 1 கைப்பிடி
ப.மிளகாய் - 3
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சுத்தம் செய்த கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், சிறிது உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்சி ஜாரில் திக்கான பதத்தில் அரைத்து கொள்ளவும்.
* அரைத்த விழுதை தோசை மாவில் கலந்து கட்டி இல்லாமல் நன்றாக கரைத்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
* சத்தான சுவையான கறிவேப்பிலை தோசை ரெடி.
* இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
குறிப்பு- கறிவேப்பிலை செரிமானம் ஆக சிறிது நேரம் ஆகும் என்பதால் இந்த தோசையை காலையில் சாப்பிடுவது சிறந்தது. இரவில் சாப்பிட வேண்டாம்.
கறிவேப்பிலையை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதை தொடர்ந்து உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகளவு உள்ளது.
பலவிதமான ஆராய்ச்சிகளிலும் கறிவேப்பிலை என்பது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது என்று கூறுகின்றனர்.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலையை முடிந்தவரை நம் உணவில் அதிகமான எடுத்துக் கொள்வது நல்லது.