
கோடைக்காலம் வந்து விட்டாலே மாங்காய் சீசனும் அதனுடன் வந்து விடும். மாங்காய் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. மாங்காயில் யாரும் அறியாத வகையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் கொண்டது. உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
இது வைட்டமின்கள், தாதுக்கள், உணவு நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஊட்டச்சத்துக்களின் கலவையாக இருக்கிறது. 100 கிராம் மாங்காயில் 60 கலோரிகள் மட்டுமே உள்ளது. அதுமட்டுமின்றி கொழுப்புகள் - 0.38 கிராமும், நார்ச்சத்து - 1.6 கிராமும், வைட்டமின் சி - 36.4 மி.கிராமும் உள்ளது. இதில் அதிகளவில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மாங்காயில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் மாங்காயில் பல்வேறு வகைகளில் சட்னிகளை செய்யலாம். இன்று மாங்காய் ரொம்ப பிடிக்கும் என்பவர்களுக்கு புளிப்பா மாங்காய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் :
மாங்காய் - 2
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
ப.மிளகாய் - 4
பூண்டு பல் - 4
இஞ்சி - சிறிய துண்டு
வெல்லம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மாங்காயை நன்றாக கழுவி தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
மிக்சி ஜாரில் நறுக்கி மாங்காயை போட்டு அதனுடன் கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, உப்பு, வெல்லம் போட்டு நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாங்காயில் உள்ள நீரே போதுமானது.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த மாங்காய் சட்னியில் சேர்த்து கலக்கவும்.
இப்போது சூப்பரான புளிப்பான மாங்காய் சட்னி ரெடி.
இதை இட்லி, தோசைக்கு மட்டுமல்ல சூடான சாதம், தயிர் மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.