
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து இஞ்சி சிறிது தேங்காய் பச்சை மிளகாய் இந்த மூன்றையும் அரைத்து சிறிது கடலைமாவை தூவி உருளைக்கிழங்கை பிசிறி ரோஸ்ட் செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
ஊறுகாய் செய்ய உபயோகப்படுத்தும் எண்ணையை நன்றாக காயவைத்து ஆவி வரும் வரை சூடாக்க வேண்டும் பின்னர் அதனை குளிரவிட்டு இந்த எண்ணெயை ஊறுகாய் செய்ய பயன்படுத்தினால் பூஞ்சனம் வரவே வராது .
தேங்காய் புதினா கொத்தமல்லி, கருவேப்பிலை இவைகளில்தான் துவையல் அரைப்போம் மாறுதலாக புடலங்காயின் உள்ளிருக்கும் பகுதி பரங்கிக்காயின் உள்ளிருக்கும் பகுதி இவைகளை வதக்கி வழக்கமான துவையலுக்கு அரைத்தால் முழுமையான சத்தும் கிடைத்துவிடும்.துவையலும் ருசியாக இருக்கும் .
இட்லிக்கு அரைத்ததில் உளுந்து அதிகமாகி போய் இட்லி மிகவும் அமுங்கி மெல்லியதாக இருந்தது என்றால் உடனே ரவையை சிறிது தண்ணீர் விட்டு பிசறி ஊறவைத்து மாவுடன் கலந்து இட்லி வார்த்தால் நன்றாக உப்பி பந்துபோல மிருதுவாக இருக்கும்.
மறுநாள் சமையலுக்காக கடலை பருப்பு போன்றவற்றை இரவில் ஊறவைக்க மறைந்து போய்விட்டால் கவலை வேண்டாம் காலையில் எழுந்தவுடன் ஹாட்பேக்கில் வெந்நீர் ஊற்றி அதில் தேவையான தானியங்களை போட்டு அரைமணி நேரம் அளவிற்கு மூடி வைத்து பின்னர் எடுத்து அரைக்க அல்லது சமையலுக்கு நேரடியாக பயன்படுத்த தேவையான அளவுக்கு பருப்புகள் ஊறியிருக்கும்.
வெந்தயம் சீரகம் மிளகு இவற்றை பொன்முறுவலாக வறுத்து எடுத்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் காரக்குழம்பு வைக்கும் அன்று குழம்பு கொதித்து வரும் போதுஇதிலிருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து போட்டு கார குழம்பு செய்தால் காரக்குழம்பு சூப்பராக இருக்கும்.
எண்ணெய் கத்திரிக்காய் கூட்டு செய்ய கத்திரிக்காயின் நீளமான காம்பை வெட்டி குடைபோல் இருக்கும் பகுதியை நறுக்காமல் கத்திரிக்காயை தலைகீழாக குடை பகுதி கீழே வரும்படி பிடித்து நான்காக நறுக்கினால் உள்ளே புழுக்கள் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அப்படியே போட்டு எண்ணெயில் வதக்கலாம்.
வாழைக்காய் வதக்கல் கறி செய்யும்போது மூன்று பெரிய வெங்காயம் நறுக்கி வதக்கி சேர்த்து இரண்டு பிடி வெந்த துவரம் பருப்பு சிறிது தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்குவதற்கு முன் சிறிது கடலை மாவு தூவி புரட்டிவிட்டு பரிமாறினால் வாழைக்காய் சூப்பராக இருக்கும்.
வடைக்கு அழைக்கும்போது சரியான பதத்தில் அரைத்து இருக்கிறீர்களா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று தெரியுமா அரைத்த மாவை கொஞ்சம் கிள்ளி ஒரு கிண்ணத்தில் உள்ள தண்ணீரில் போடவேண்டும் சரியான பதத்தில் இருந்தால் மாவு தண்ணீரில் மிதக்க வேண்டும் கெட்டியாக அரைத்து இருந்தீர்கள் என்றால் மாவு தண்ணீருக்குள் மூழ்கிவிடும் மிகவும் தண்ணீராக அரைத்து இருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும்.
குழம்புக்கு கசகசா அரைப்பது எளிதில் நடக்கும் காரியமில்லை அதனால் வாங்கிய உடனே கசகசாவை வெறும் வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும் தேவையானபோது எளிதில் எடுத்து பயன்படுத்த முடியும்.
ரவையை மாவாக திரித்து அதில் வெல்லப்பாகு விட்டு தேங்காய் பூ போட்டு பிசைந்து பிடித்து வேகவைத்தால் ருசியான கொழுக்கட்டை கிடைக்கும்.
பாசிப்பருப்பை லேசாக வறுத்து நைசாக மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொண்டால் அல்வா கேசரி போன்ற இனிப்புகள் பாயாசங்கள் தயாரிக்கும்பொழுது இந்த பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து கொஞ்சம் நெய்யில் பொரித்து சேர்த்தல் மணமும் சுவையும் கூடுதலாக இருக்கும்.