

லேசாக வறுத்து அரைத்த பாசி பருப்பு மாவு, சர்க்கரை கலவை நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறுதியாக அதில் உருக்கிய நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உருண்டையாக பிடித்தால் சத்தான பாசிப்பருப்பு உருண்டை தயார். இந்த சுவையான பாசிப்பருப்பு உருண்டையை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். இது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உணவும் கூட.
கோடைக்காலத்தில் உங்களுக்கு இனிப்பு சாப்பிட ஆசையாக இருந்தால், ஆரோக்கியமான மற்றும் சுவையான பாசிப்பருப்பு லட்டுகளைச் செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்பு சத்து நிறைந்தது மற்றும் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
இந்த லட்டுகளை சாப்பிடுவதால் வயிற்றுக் கோளாறோ அல்லது சோர்வோ ஏற்படாது. பாசிப்பருப்பு லட்டு சாப்பிடுவது எலும்பு வலியைத் தணிப்பதோடு, மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணமும் தரும். காலை உணவாக ஒரு பாசிப்பருப்பு லட்டு சாப்பிடுவது உங்களை நீண்ட நேரம் ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். குழந்தைகளுக்கும் இது ஆரோக்கியமான ஒரு இனிப்பு. இதன் பலன்கள் என்னென்ன பார்க்கலாம்.
பருப்புகளில் 10-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. இதில் பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு, கடலைப்பருப்பு போன்றவைகள் உடலில் கொழுப்புச் சத்தை குறைக்கும் ஆற்றல் உடையது. அந்த வகையில், அதிகம் உதவும் பருப்பு வகையில் பாசிப்பருப்பு முதன்மையான ஒன்றாக உள்ளது என்கிறார்கள்.
''பாசிப்பருப்பில் வைட்டமின்கள் `ஏ', `பி'. `சி', `ஈ' ஆகியவை இருக்கின்றன. வைட்டமின் `ஏ' சருமத்துக்கும் கண்களுக்கும் நல்லது. வைட்டமின் `பி' ரத்தசோகை வராமல் தடுப்பதோடு நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். இவற்றோடு இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட், மாங்கனீஸ், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளன.
இந்த தாதுக்கள் அனைத்தும் உங்கள் நோயெதிர்ப்பு ஆற்றலை உயர்த்தவும், உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன. உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.இந்த பருப்பில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கவும், நல்ல இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஒரு கப் (200 கிராம்) பாசிப் பருப்பில் கலோரிகள்: 212 , கொழுப்பு: 0.8 கிராம், புரதம்: 14.2 கிராம் , கார்போஹைட்ரேட்டுகள்: 38.7 கிராம், ஃபைபர்: 15.4 கிராம் உள்ளது: பாசிப்பருப்பு உயர்தர தாவர புரதத்தின் மிகச் சிறந்த மூலமாகும். உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது புரத நுகர்வு அதிகரிப்பது தசைகளை உருவாக்க மற்றும் திருப்தியை மேம்படுத்த உதவும். இவற்றில் உள்ள தாதுக்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும், சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக இருக்கவும் உதவுகிறது.
இவை இரும்பின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இரத்த சிவப்பணுக்களின் (RBCs) எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவுகிறது. மேலும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் கூட பாசிப்பருப்பை தங்களது உணவுகளுடன் சேர்த்து வரலாம். தினமும் பாசிப்பருப்பு சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகிவிடும். நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்கள் பாசிப்பருப்பை உணவில் தினமும் இரண்டு வேளை சேர்க்கவேண்டும்.
பாசிப்பருப்பு சீக்கிரம் வேகும், உடலின் கழிவுகளை வெளியேற்றக்கூடிய தன்மை கொண்டிருப்பதால், பாசிப்பருப்பு கேன்சரை எதிர்க்கவும் உதவுகிறது. துவரம் பருப்பைவிட பாசிப்பருப்பில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீக்கிரம் ஜீரணமாகிவிடும். ஜீரணமாவதில் பிரச்னை இருப்பவர்கள் தாராளமாகப் பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும் பண்பும் பாசிப்பருப்புக்கு உண்டு. இதிலிருக்கிற `காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்' சாப்பிட்டவுடன் உடனே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது. அதனால் நீரிழிவு பிரச்னை இருப்பவர்களும் பயப்படாமல் பாசிப்பருப்பு சாப்பிடலாம்.
உங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால், அனைத்து வகையான பருப்பு வகைகளையும் சாப்பிடக்கூடாது. குறைந்த அளவு பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ள பருப்பு வகைகளை நீங்கள் சாப்பிட வேண்டும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாசிப் பருப்பு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் புரதம் நிறைந்துள்ளது. ஆனால் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது.