

வெள்ளரி பிசிறல்
தேவை:
வெள்ளரிக்காய் – ஒன்று, பயத்தம்பருப்பு – அரை கரண்டி,
வற மிளகாய் – 4,
கடுகு, பெருங்காயம், எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு,
மல்லித்தழை – சிறிதளவு,
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளரியைக் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பயத்தம்பருப்பை மலர வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து… காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், வெள்ளரி சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு, வெந்த பயத்தம்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும். சுவையான வெள்ளரி பிசிறல் ரெடி.
வெள்ளரி சாதம்
தேவை:
பச்சரிசி - ஒரு கப்,
வெள்ளரித் துருவல் - அரை கப்,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி - ஒரு துண்டு,
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.
தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு, உளுத்தம்பருப்பு தலா - அரை டீஸ்பூன்,
நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள்.
நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும் உப்பையும் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள்.
அந்தக் கலவையுடன் சாதம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள். இப்போது சுவையான வெள்ளரி சாதம் தயார்.
வெள்ளரி மோர் கூட்டு
தேவை:
வெள்ளரிப் பிஞ்சு துண்டுகள் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு – தாளிக்க தேவையான அளவு,
பச்சை மிளகாய் – 4,
கெட்டி மோர் – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெள்ளரி துண்டுகளை தண்ணீர் விட்டு வேக வைத்து உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மோருடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துப் பரிமாறவும். சுவையான வெள்ளரி மோர் கூட்டு தயார்.
வெள்ளரி மோர்
தேவை:
தயிர் - 100 கிராம்,
சிறிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் - தலா 1, நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளரிக்காயை நறுக்கி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு முறை சுற்றி, தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். வடிகட்டி குளிரவைத்துப் பரிமாறவும். வெயிலுக்கு இதமான வெள்ளரி மோர் ரெடி. தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.