
மோர் குழம்பு அதிகம்பேரால் விரும்பப்படும் ஒன்று. சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடும்போது தயிர் மணத்துடன் வித்தியாசமான சுவையுடன் இன்னும் கொஞ்சம் சாதம் வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு இருக்கும் இந்த மோர் குழம்பின் ருசி. ஆனால் சிலருக்கு எப்போதுமே மோர் குழம்பு வைப்பதில் சில சந்தேகங்கள் உண்டு. என்ன காய் போடலாம்? மோரை அடுப்பில் கொதிக்க வைக்கலாமா போன்ற சந்தேகங்களுக்கான தீர்வுதான் இங்கு. மோர் குழம்பின் செய்முறை மற்றும் சில டிப்ஸ்களுடன்..
மோர்க்குழம்பு
தேவை:
புளிக்காத கட்டித் தயிரில் கடைந்த மோர் - 1 கப்
கடலைப்பருப்பு அல்லது துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1 ஸ்பூன்
புழுங்கல் அரிசி - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
உப்பு மஞ்சள் - தேவைக்கு
பெருங்காயம் – சிறிது
செய்முறை:
துவரம் பருப்பு அரிசி வெந்தயம் இவற்றை ஊற வைத்து தேங்காய்த்துருவல், பெருங்காயம், மிளகாய் சேர்த்து அரைத்து மோரில் கலக்கி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடுப்பில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு (சிறிது நெய்யும் சேர்க்கலாம்) அதில் கடுகு, சீரகம், உளுந்து வற்றல் ஒன்று, கருவேப்பிலை போட்டுத்தாளித்து மோரை ஊற்றி நுரை கட்டி வரும்போது இறக்கி கொத்தமல்லி தழை தூவி மூடி வைக்கவும்.
மோரை அடுப்பில் கொதிக்கவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தனியே தாளிக்கும் கரண்டி வைத்து அதில் சூடான எண்ணெயில் கடுகை தாளித்து கலந்து வைத்திருக்கும் மோரில் ஊற்றியும் உபயோகிக்கலாம்.
அதே போல் துவரம் பருப்பு அரிசி வெந்தயத்தை தனித்தனியாக வறுத்தும் பின் அரைத்து இதில் சேர்க்கலாம்.
இப்பொழுது மோர் குழம்பில் என்ன சேர்க்கலாம் எனப்பார்ப்போம்.
மோர் குழம்புடன் உப்பு சேர்த்து வேகவைத்த வெண்டைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய் போன்றவற்றையும் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
நார் எடுத்து சுத்தம் செய்த பொடியாக வெட்டிய வாழைத்தண்டு, கீரைத்தண்டு இவைகளை உப்பு சேர்த்து வேகவைத்து மோர் குழம்பில் சேர்க்கலாம்.
அடுத்து சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு இவைகளை தனியாக வேக வைத்து தோலை உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கி போடலாம்.
காய்கறி இல்லாதபோது போண்டா போல சுட்டு மோர் குழம்பில் போடலாம். இந்த போண்டாவிற்கு உளுத்தம் பருப்புடன் இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து ஊறவைத்து களைந்து அதனுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம் சிறிது, தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைத்து நறுக்கிய கருவேப்பிலை மல்லித்தழை கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுத்து தாளித்து வைத்திருக்கும் மோர் குழம்பில் போடலாம்.
மோர் குழம்பை காய்கறிகள் போடாமலும் சாதத்துடன் சேர்ந்து சாப்பிடலாம். அல்லது மேலே கூறியுள்ள காய்கறிகள் அல்லது போண்டாவை விருப்பப்படி சேர்த்தும் உபயோகிக்கலாம். அவரவர் சாய்ஸ்.