
சூடான சாதம் ரெடி. ஆனால் குழம்பு, ரசம் வைக்க நேரமில்லை என்பவர்களுக்கு கை கொடுப்பதுதான் பொடி வகைகள். சாமான்களை பதமாக வறுத்து தகுந்த உப்பு காரத்துடன் பொடித்து நல்லெண்ணையோ நெய்யோ ஊற்றி பிசைந்து சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடலாம் என்றே தோன்று.ம் இதோ உங்களுக்காக சில மணக்கும் பொடி வகைகள்.
முந்திரி பருப்பு பொடி
தேவை:
முந்திரிப்பருப்பு ஒரு கப்
உப்பு - தேவைக்கு
வற்றல் -10
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிளகாய் வற்றலை வதக்கி எடுக்கவும். அதே எண்ணெயில் முந்திரி பருப்பையும் இளம் சூட்டில் வறுக்கவும். இப்போது மிக்சியில் முதலில் வறுத்த மிளகாய்களை இடித்து பின் முந்திரி பருப்பையும் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி தேவையான உப்பு சேர்த்து ரவை போல அரைத்து எடுத்து பாட்டிலில் போட்டு மூடவும். தேவைப்படும்போது சாதத்துடன் நெய் கலந்து இந்த பொடியை சாப்பிடலாம். இது கொஞ்சம் ரிச்சான சத்து மிகுந்த பொடியாகும்.
உளுத்தம் பொடி
தேவை:
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பெருங்காயம்- 2 சிட்டிகை
மிளகாய் வற்றல் -12
சீரகம் - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை -சிறிது
உப்பு-தேவைக்கு
செய்முறை:
உளுத்தம் பருப்பை மிதமான தீயில் வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். அதேபோல் சீரகம் பெருங்காயம் மிளகாய் வற்றல்கள் போட்டு வறுத்து இறுதியாக கருவேப்பிலை உப்பு சேர்த்து வறுத்து ஏற்கனவே வறுத்து வைத்துள்ள உளுத்தம் பருப்புடன் சேர்த்து மிக்சி அல்லது மிஷினில் கொடுத்து திரித்து எடுக்கவும். இந்த பொடியை சாதத்துடன் போட்டு நெய் கலந்து சாப்பிடலாம். இது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஏற்ற சத்தான பொடியாகும்.
தேங்காய் மிளகாய் பொடி
தேவை:
தேங்காய் - 1
வரமிளகாய் - 15
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - சிறிது
புளி -நெல்லிக்காய் அளவு
வெல்லம்- சிறிது (தேவை என்றால்) கருவேப்பிலை -சிறிது
உப்பு –தேவைக்கு
செய்முறை:
தேங்காய் துருவலை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவேண்டும். இதேபோல் மற்ற பொருட்களையும் தனித்தனியாக சிறிது எண்ணெய்விட்டு வறுத்து மிக்ஸியில் இட்டு பரபரப்பாக எடுத்து அதனுடன் உப்பு தேங்காய் துருவலையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். இது மிகவும் மணமான பொடி.
எள்ளு பொடி
தேவை;
கறுப்பு எள்ளு -200 கிராம்
மிளகாய் வற்றல் -15
பெருங்காயம் -தேவைக்கு
கருவேப்பிலை- ஒரு கொத்து
உப்பு –தேவைக்கு
செய்முறை:
எள்ளை நன்றாக கழுவி மண் போக சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வற்றலை சிறிது எண்ணெய்விட்டு வறுத்து எடுத்து அதனுடன் எள்ளை சேர்த்து பொடிக்கவும். உப்பு கறிவேப்பிலை சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். மணமிக்க எள்ளுபொடி சுவையுடன் உடல் நலனுக்கும் ஏற்றதாக இருக்கும்.