
கருப்பட்டி இட்லி
தேவை:
புழுங்கல் அரிசி - 4 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
தூளாக்கிய கருப்பட்டி - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
நெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
கருப்பட்டி இட்லி செய்வதற்கு முதலில் அரிசி, உளுந்தை தனித்தனியே ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு அரைத்து, நன்றாக புளிக்க வைக்கவும். பிறகு நன்கு புளித்த மாவில், தேங்காய்த் துருவல், நெய், ஏலக்காய் தூள், ஆப்ப சோடா ஆகியவற்றைச் சேர்த்துக்கலக்குங்கள். பிறகு கருப்பட்டியை 1 கப் சூடான தண்ணீரில் கரைய வைத்து, வடிகட்டி, அப்படியே மாவில் சேர்த்து நன்றாகக் கலந்து, இட்லி குக்கரில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். ருசியான கருப்பட்டி இட்லி தயார்.
********
கருப்பட்டி கொழுக்கட்டை
தேவை:
அரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:
கடாயில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கெட்டியாகும் வரை கிளறி எடுத்து ஆறவிடவும். கடாயில் கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கருப்பட்டியை கரையவிட்டு வடிகட்டி, இத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொட்டுக்கடலை மாவு சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான, சத்தான கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.
*******
கருப்பட்டி முறுக்கு
தேவை:
பச்சரிசி மாவு – 5 கப்,
வறுத்த உளுந்து மாவு – ஒன்றரை கப்,
எள் – 2 டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
கருப்பட்டி – 2 கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, எள், உப்பு, நெய் ஆகியவற்றைப்போட்டு கலந்துகொள்ளவும். கருப்பட்டியை தூள் செய்து தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
அதில் மாவு கலவையை கொட்டிக்கிளறவும். ஆறிய பிறகு நன்றாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், மாவை முறுக்குக் குழலில் போட்டு எண்ணெயில் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.
******
கருப்பட்டி உளுந்தங்கஞ்சி
தேவை:
உடைத்த உளுந்து – கால் கிலோ,
கருப்பட்டி - 150 கிராம்,
சுக்கு – சிறிதளவு,
ஏலக்காய் - 5,
துருவிய தேங்காய் - ஒரு கப்,
பூண்டு - 10 பற்கள்.
செய்முறை:
உளுந்தை மணம் வரும்வரை வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கருப்பட்டியைத் தட்டி சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி எடுத்துவைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காய், ஏலக்காய், சுக்கு இவற்றை சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் அரைத்த இந்த விழுதைப் பிழிந்து பால் எடுத்துக்கொள்ளவும். வறுத்துவைத்துள்ள உளுந்துடன் பூண்டு சேர்த்து குக்கரில் சாதம் வேகவைப்பதுபோல் மூன்று முறை விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின்பு இதை நன்கு மசித்துவைத்துக் கொள்ளவும். மசித்த இந்த சாதக்கலவையில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கலந்து கலவையை சூடாக்கவும். பின்பு இதனுடன் எடுத்துவைத்துள்ள சுக்கு - ஏலக்காய் - தேங்காய் சேர்த்த பாலைக் கலக்கவும். பின்னர் வடிகட்டிய கருப்பட்டிப் பாலையும் இதனுடன் ஊற்றி, குறைவான தீயில் சிறிதுநேரம் வைத்து பின்னர் எடுத்துவிடவும். சுவையான கருப்பட்டி உளுத்தங்கஞ்சி ரெடி.