

முடவாட்டுக்கால் கிழங்கு என்பதை சைவ ஆட்டுக்கால் என்றும் அழைப்பார்கள். இது முடக்கு வாதத்தை போக்கும் தன்மை கொண்டது என்பதால் முடவாட்டுக்கால் என்று பெயர் பெற்றது. இது பார்ப்பதற்கு ஆட்டுக்கால்போல ரோமங்களுடன் காணப்படும். இது கொல்லிமலை, ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் பாறைகளில் வளரும் ஒரு தாவரத்தின் கிழங்காகும். மூட்டு வலி, சளி, இருமல், உடல் வீக்கம், மாதவிடாய் வலிகள் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதனை தோல் சீவிய பிறகு உள்ளே இஞ்சி போன்ற வெள்ளை நிறத்தில் காணப்படும்.
கொல்லிமலை, ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு சென்றவர்களுக்கு முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இது ஆட்டுக்கால் சூப்பின் வாசனையுடன், சூடாக ஆவி பறக்க மணக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை அந்த மலைகளின் குளிரில் அமர்ந்தபடி சாப்பிடுபவர்கள் அதிகம் பேர். இந்தக் கிழங்கு இப்போது பரவலாக எல்லா இடங்களிலுமே கிடைக்கிறது.
இது சைவமா?
இது தாவரம்தான் என்பதால் சைவ வகையறாவை சேர்ந்ததே. மலைப்பகுதி மக்களுக்கு முடவாட்டுக்கால் சூப் குளிர்கால பானமாகப் பயன்படுகிறது. முடவாட்டுக்கால் கிழங்கு பொடி என்று கிடைக்கிறது. இதன் நம்பகத்தன்மை நிச்சயம் சோதனைக்குரியது. நேரடியாக மலைப்பகுதியில் இருந்து பெறப்படும் இவற்றில் நம்பகத்தன்மை இருக்கலாம். அதுவே வியாபார ரீதியாக என்றால் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இந்த கிழங்கை ஒரு சாக்குத் துணியில் சிறிது மணல் வைத்து மூடி வைத்தால் ஆறு மாதம் வரை கூட பயன்படுத்திகொள்ள முடியும் என்று மலைவாசிகள் கூறுகின்றனர். எனவே இவற்றை நேரடியாக மலைப்பகுதிகளிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.
மருத்துவ குணங்கள்:
இக்கிழங்கு பாறைகளில் இருந்து செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் சிலிக்கா போன்ற தாதுக்களை உறிஞ்சும் தன்மை கொண்டதால் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு வலி, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு சிறந்த தீர்வாக உள்ளது. பசியின்மை மற்றும் செரிமான கோளாறுகளுக்கு உதவும். மூட்டு வலியை போக்குவதுடன் உடல் வலிமையையும் மேம்படுத்தும். இது ஆட்டுக்கால் சூப்பினால் கிடைக்கும் நன்மைகளை சைவ உணவு உண்பவர்களுக்கு அளிக்கிறது.
மூட்டு வலிகளைக் குறைத்து, எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை தரும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதால் குடல் இயக்கங்களை மேம்படுத்தவும் உதவுகிறது. குழந்தைகள் வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த கிழங்கை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரில் குளிக்க வைக்கிறார்கள்.
பயன்பாடு:
இதனை சூப், துவையல், சட்னி என செய்து சாப்பிடலாம். எது செய்வதாக இருந்தாலும் நன்கு வேகவைத்து செய்யவேண்டும். இல்லையெனில் கருணைக் கிழங்குபோல் தொண்டையை அறுக்கும். பொதுவாக இது சூப்பாக செய்யப்படுகிறது. முடவாட்டுக்கால் கிழங்கின் மேற்பகுதியில் இருக்கும் தோலை சீவி எடுத்துவிட்டு கிழங்கினை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, அத்துடன் இஞ்சி, பூண்டு, பட்டை, மிளகு, சின்ன வெங்காயம், தக்காளி போன்றவற்றை சேர்த்து நன்கு அரைத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவும். பாதியாக வற்றியதும் இறக்கி சிறிது மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பருக நல்ல பலன் தரும். இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
பக்க விளைவுகள்:
கிட்னி பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்பு எடுத்துக்கொள்வது நல்லது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி எடுத்துக் கொள்வது வயிற்றுப் போக்கு பிரச்னை ஏற்பட செய்யலாம். எனவே எதையும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.